Friday, 5 January 2024

ஸ்ரீராஜபாலமுருகா

கணநாதன் கணேசன் கற்கண்டு தம்பியே கந்தனே செந்தில்நாதா
குணசீலன் மாமனாய் கொண்டாடும் பாலனே குங்கும வண்ணமார்பா 
பணமாலைகள் சூடும் மாமியாம் திருமகள் கட்டியே கொஞ்சுழகா
மனதோடு என்னோடு இருந்துவிடு மற்றெல்லா விளையாட்டும் விளையாடலாம்
மலைமீது ஏறாமல் மயிலோடு வந்தனைநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...1

ஏனிப்பிறவி என்கின்றபோது அதற்கென்ன பதிலுமில்லை 
வீணென்று நினைத்தால் விடியாத நாளாகும் முடிவில்லா பயணமில்லை
இயக்கமும் ஆக்கமும் முயற்சியும் விட்டுபய
அழற்சியில் வாழ்தல்நலமோ
கலக்கமும் தயக்கமும் குழப்பமும் மயக்கமும் வேலாலே அழிக்கவருவாய் 
மலைமீது ஏறாமல் மயிலோடு வந்தனைநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...2


சேயென் தலையெழுத்து தாயீன்ற  நேரம் 
தாயின் தலையெழுத்து தந்தையை சேரும்
தந்தை தலையெழுத்து பிரம்மனின் கைகோல் 
பிரம்மன் சிரங்களோ உன் வேலின்  கீழன்றோ
மலைமீது ஏறாமல் மயிலோடு வந்தனைநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...3

எட்டு திக்காக அழைத்துமே 
உன்செவியில் ஏதுமே விழவில்லையா 
ஏழு சுவரமாக பாடியும்நீ 
ரசிக்காது மனமில்லையோ 
ஆறு காலமும் ஆறுமுகாவென 
அழுவதும் இரக்கமிலையோ 
ஐந்து நிலமெல்லாம் குன்றேறியே அடியேனை காணவில்லையோ 
மலைமீது ஏறாது மயிலோடு வந்திடுநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...4

மாங்கனி கிடைக்காமல் போனதற்காக மலையிலே ஆண்டியானாய்
தேங்கனி வள்ளியை காதலால் வசப்படுத்த கிழவனாய் வேடனனாய் 
தூங்கா தேவரின் துயர் தீர்க்கவோ வேலேந்தி வீரனனாய் கந்தனனாய்
தாங்காத துயரோடு பாடுவேன் விளையாட்டாய் மறைந்துமே ஆடல் அழகோ 
மலைமீது ஏறாது மயிலோடு வந்திடுநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...5

வீணானப் பொருளாயின் வேண்டாமென வெளியிலே வீசிவிடுவார் 
காணாதப் பொருளாயின் கண்திருஷ்டி போனதென கண்மூடி தான்கழிப்பார் 
பாழானப் பொருளென்றே பண்டத்தை வழித்தெடுத்து பேயாற்றில் விட்டு எறிவார் 
பாட்டாலே பாடியுனை படாதபாடு செய்வேனோ குகசுவாமியே 
மலைமீது ஏறாது மயிலோடு வந்திடுநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...6


No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்