Thursday, 25 April 2013

கேந்த்ரிய விநாயகப் புலரே -


கேந்த்ரிய விநாயகப் புலரே
(27-06-2004)

கங்கை கீழ்புறமும் யமுனை மேல்புறமும்
        அமைந்ததோர் சோலையருகே
நங்கை யால்வளர் மாமஹாபாரதம்
        விளைந்ததோர் இந்திரபிரஸ்தம்
தங்கை காளியோடு கோபாலன் குழலூதி
        வலம்வந்த நதிபெற்றவா
துங்கம ளித்து துந்தியை நிறைத்து வளர்           
        கேந்திரிய விநாயகப் புலரே               (1)
துங்கம் - வெற்றி / தூய்மை         


மங்கை தன்பங்கானச் சங்கடமோசனுடன்
        மால்மருகன் கோள்களெல்லாம்
எங்குள முண்டோ அங்குதான் என்று
        தங்கிட ஆர்வம்கொண்டு
இங்கே அருளோச்ச ஊர்வலம் கரிமீது
        அசைந்தாடி வந்தசுமுகா
அங்கை மகிமையுற வித்தகா வா! செல்வக்
        கேந்திரிய விநாயகப் புலரே                (2)

நலம்புரிய  வந்தாய் நகர்தனை அலங்கரித்தாய்
        நாமகள் போற்றும் களிறே
வலம்புரியா யின்று வரம்நல்குமே சிவ
        நாமஞ்சொல் கற்ற ஒளியே
பலம்தந்து பாரினில் பக்தரை ஆற்றவே
        உளம்தந்த ஒற்றைக் கொம்பே
குலம்வாழ அருள்செய் கும்பிடுவோம் செல்வக்
        கேந்திரிய விநாயகப் புலரே                (3)

அறங்காண வழிகாட்டி பொருளீட்ட வகைக்கூட்டி
        வளமீட்டும் வன்னிமலரே
திறமின்பம் நிறையுற்று வீடுபேற்றளிக்கும்
        முழுமுதற் தேவர் களியே
துறவறம் தந்துநல் முக்தியும் வழங்கிநில்
         இமயம் வாழ் வெற்றிகளபே
நறவத்தில் குளிக்கும் கும்பிடுவோம் செல்வக்       
        கேந்திரிய விநாயகப் புலரே                (4)
  நறவம் - தேன் / பால்

ஆக்கலுன் ஆற்றல் காத்தலுன் கருணை
        அழித்தலின் மொத்தவடிவே
ஊக்கமாய் மூலத்தில் ஆதரமாய் எழுந்து
         சித்திகள் எட்டும் வழியே
காக்கும் சித்தியின் புத்தியின் பதியாகி
         யோகத்தைக் காட்டும் குருவே
நீக்கமற நெஞ்ஞிலே தேக்க மகற்று செல்வக்
        கேந்திரிய விநாயகப் புலரே                (5)

                                                                           

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்