Saturday, 28 October 2017

என் பார்வையில் கண்ணதாசன்

முன்னுரை
ஓராயிரம் பார்வையிலே என் பார்வையை நீயறிவாய்  , என் பார்வையில் உன்வடிவம்  ஓர் மாபெரும் கவியரங்கம். முத்தய்யா, உன்னை யொன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்  என்னைக் கட்டுரை  எழுதச் சொன்னால் ஒரு நாள்  போதுமா ஒரு மாதம் தான் போதுமா? எத்தனைப் படைப்புகள் …அப்பப்பா ! சின்ன கண்ணன் புன்னகையில் என்னத்தான் ரகசியமோ ? தட்டு தடுமாறும் எனைப் பார்த்து கேட்கிறீர் மயக்கமென்ன இன்னும் மெளனமென்ன என்று கேளிக்கையுடன்.? ஆயிரம் மலர்களே மலருங்கள் ஆயிரம் வார்த்தைகள் பகிருங்கள் கவியரசே என்றே தொடர்கிறேன்.  கவியரசே எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன், உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் ?
புகழுரை
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்று வாழவில்லை நீ.  எந்தஊர் என்றவனே என்று கேட்பவர் முன் இருந்தவூரைப் பெருமையுற செய்தவன் நீ. தமிழகம் பிறந்தாலும் உலகம் பிறந்தது எனக்காக …ஓடும் நதிகளும் எனக்காக என்று உரிமையாய் பாடியவன் நீ ? கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கவியென்றால் கவியரசுன்றன் வரியாகுமா எனக் காட்டியவன் நீ? புவியரசு தான் விதிக்குமா! கவியரசின் வரிகளும் வாடிக்கையாய் கேளிக்கைவரிகள் விதிக்குமய்யா! மெல்லிசை மன்னரின் மெட்டுகளும் உங்களின் வரிகளின் சொட்டுகளும்  அற்புத அலை வரிசைகளை செவிகளில் நுழைத்தன ! அனுபவம் புதுமை என்று பல்லவி பாடிய பின் விஸ்வநாதன் வேலை வேண்டும் என்றும் ஆடினாய். பளிங்கினால் ஒரு மாளிகையும் அமைத்து அதன் மஞ்சத்திலிருந்து  எல்லோரது   நெஞ்சத்தில் அமர்ந்தவன் நீயல்லவோ ? கருமை நிறக் கண்ணா !
காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது போன்றது உங்கள் கவி பெருக்கு! கற்பனை  முறுக்கு!!. பல்லவியிலிருந்து சரணம் வரை அருவி போல் தொடராய் கவிதை வரும். இந்தத் திறன் இப்போது எவருக்கு இருக்கிறது ?   மலர்ந்தும் மலராத பாதி மலரானப் பாச மலராகட்டும் கண்ணே கலைமானே என்ற வாச மலராகட்டும் காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்ற தாலாட்டாகட்டும் எதிலும் உங்களின் கை வண்ணம். இந்த கை வண்ணம் அங்கே கண்டேன் மை வண்ணம் இங்கே கண்டேன் என்று உங்களின் கவி தொகுப்பினில் எத்தனை ஆளுமைகள் ?  உண்மையில் பாடல் வந்ததும் தாளம் வந்ததா இல்லை தாளம் வந்ததும் பாடல் வந்ததா,  சொல்லுங்கள் பார்க்கலாம்? எனக்கு மட்டும் எனக்கு மட்டும் ரகசியம் சொல்வாய்,அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிட மாட்டேன்.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா? நம் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?.வயற்காடாகட்டும் ஏரிகரையாகட்டும் கல்லூரி வளாகமாகட்டும் அயல்நாட்டு சங்கமாகட்டும் உம் பாட்டையே பாட வைத்தது யார்?
சிறப்புரை
என்னைப் போன்ற பூஜ்ஜியத்துக்குள், ஒரு ராஜ்ஜியம் அமைத்தவன் நீ.  புரியாமல் நின்றவன் இவன்.
அத்தனையும்   முத்தமிழ் காவியமோ ஆன்றத் தமிழ் ஓவியமோ ? கோப்பையில் உன் குடியிருப்பாகலாம் ஒரு கோலமயில் உன் துணையாகலாம் வாசிக்கும் எங்களுக்கு அத்தனையும்  கள் போதை அமுதம் தான்.
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம் போல் தமிழ் மக்களுக்கு வாய்த்தது உங்களின் பாடல்கள்.   எளிமையாகவும் இனிமையாகவும் படிக்காத பாமர மக்களாகட்டும் ஆராய்ச்சி செய்யும் முனைவராகட்டும் அனைவருக்கும் உம் கவிதை தேனீர் விருந்து.  எப்படி ?  பார்த்தேன் ரசித்தேன் பக்கங்களை இசைத்தேன். பாட்டு பாடவா  பார்த்து பேசவா என்று தமிழை அழைத்ததால் என்னவோ?  அவளும் ஜல் ஜல் யெனும் சலங்கையொலி கூட்டி நடனமாடினாள் உங்கள் முன்.
அறிவுரை
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி யில்லை என்பதில் உன் போராட்ட வாழ்க்கையை அறிய முடிகிறது. வந்து பிறந்துவிட்டேன்  ஆனால் வாழத் தெரியவில்லை என்பதில் காயங்கள் தெரிகிறது. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று வனவாசத்தில் வரித்த போது சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்றே மது போதையில் அடிமையானாய்.  போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே என்று ரசிகர்கள் அழுத போது மயக்கம் எனது தாயகம் மெளனம் எனது தாய் மொழி என்று ஆறுதல் அளித்தாய் . உங்கள் சொத்துகளை கபளீகரம் செய்த தொண்டர்களுக்கும்  யாரைத் தான் நம்புவதோ என்று குட்டு வைத்தாய்.  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று நிலைகுலைந்தாய். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததல்லவா ? யாரை நம்பி நான் பிறந்தேன் என்ற எழுச்சியுடன் நிமிர்ந்தாய்.  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று சவாலை சமாளித்தாய். நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு , உன்னை யறிந்தால் நீ உன்னை யறிந்தால் வரிகளும்  படிப்பில்லாத மக்களுக்கும் நம்பிக்கை கொடுத்தது.உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பது  தாழ்ந்த மனப்பாண்மை நோயாளிகளுக்கும் ஊக்க மருந்து , ஆறுதல் அரவணைப்பு. செல்வத்தை சொல்லும் போது காசே தான் கடவுளடா
என்றாய். பால் தரு பசுவுக்கு “இணங்காதோர் மனம் கூட இணங்கும் (கருணை) ,
நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும் (நம்பிக்கை), வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும் (சிறப்பு), உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும் (பயன்) என்றாயே. தற்கால  அரசாங்கத்திற்கு கைக்குக் கைமாறும் பணமே – உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே, வரவு எட்டணா செலவு பத்தணா இக்கால நிலைக்கு ஏகப் பொருத்தம். அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் என்பதும் ஒரு ஏவுகணை தான்.”மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்,நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்..,கூட இருந்தே குழி பறிச்சாலும் கொடுத்தது காத்து நிக்கும்” ஆகா அற்புதம்.
இல்லறவுரை / காதல் உரை
‘நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை,காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை”  வல்லவன் இப்படி சொல்லலாமா ? பாலிருக்கும் பழமிருக்கும் பசியெடுக்காது உங்களின் பாட்டை கேட்டால். சிட்டு குருவி முத்தங் கொடுத்த இளமை காதலும் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்  உதிரம் கொட்டுதடி என்ற முதிர்ந்த காதலும்  திரைப் பாடல்களாய் யார் தரப் போகிறார்கள்? மலர் போன்ற இதழ் இன்று பனிகண்டு துடிக்கும் என்ற வரிகளில் காமம் தெரிக்கிறது. ஆபாசம் தெரியவில்லை. ” சுக்கு மிளகு தட்டி சூப்பு வைச்சு”    என்றால் இன்று பாரத விருது !  அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்காகாது என்பதில் மின்னல். மனைவிக்கு வளர்ந்த கலை மறந்து விட்டாள் …..குடும்பக் கலை போதுமென்று … – அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா? என்ற அறவுரை  வழங்கினாய்.  திருமண அர்த்ததிற்கு “
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை – (சண்டையே வராது பாருங்க) ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை”. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்  என்பதை உணர்ந்தார் போல் உன் கஜானாவும் எனது என்ற நிலையின்று.  காதலின் அர்த்தத்திற்கு  “பொன்னை விரும்பும் பூமியிலே,என்னை விரும்பும் ஓருயிரே,புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே” என்றாய். காதல் சிறகை காற்றினில் விரித்து பறந்தாய். என்னதான் ரகசியமோ இதயத்திலே, நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே என்றும் மயங்கினாய். “நடமாடும் மேகம் நவநாகரீகம் … நடமாடும் செல்வம் பணிவான தெய்வம் பழங்கால சின்னம் உயிராக மின்னும்”  என்று கன்னிகளின் பண்பைக் கூறினாய். பெண்மையை போற்றும் முகமாக ” ஈன்ற தாயை நான் கண்டதில்லை எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
”  என்றாய்.  ஊடலைச் சொல்லி “கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது,என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு,ஆசையில் விழுந்தேன் அங்கே,காலையில் கனவுகள் எங்கே” உறவாக்கினாய்.
“மலராத பெண்மை மலரும், முன்பு தெரியாத உண்மை தெரியும்” என்றும் உசுப்பினாய். “ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன” என்று பரிமளித்தாய்.
கற்புக்கு  ” தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை,தெருவினிலே விழலாமா
,வேறோர் கை தொடலாமா,ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா,ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா” என்ற வர்ணித்தாய். குழந்தைக்கு ‘வாழாத மனிதரையும் வாழ வைக்கும் சேயல்லவோ, பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ’ என்றாயே பார்க்கலாம்.
பகுத்தறிவு உரை
அண்ணன் என்னடா என்ற பல்லவியில் குடும்ப அரசியலை கலக்கியவர் நீங்கள். அராஜகம் செய்ய வடக்கே முளைத்தவரை ராணி மகா ராணி யென்று பாடி,  கவியரசை புவியரசு வெற்றி கண்டதுண்டா என்று வரிகள் விட்டதை மூன்றாம் வகுப்பில் ரசித்தவன் நான். அது தான் நான் கவி யெழுத வித்திட்டதும். இன்றும் தில்லி ராஜபேட்டையில் நிமிர்ந்து நடக்க  வைக்கிறது செந்தமிழ் கவிதைகளை இயற்றி கொண்டு!புதியதல்லவே தீண்டாமை யென்பது புதுமையல்லவே அதை நீயும் சொன்னது  சமூகப் பிரச்சனைக்கு பகிரங்க கண்டனம்.இளம் பகுத்தறிவில் கடவுள் ஏன் கல்லானான் என்றும் இறைவன் இருக்கிறானா என்றும் எழுதிய வரிகள்,  முதிர்வில் இறைவன் வருவான், கடவுள் ஒருநாள் .. தனியே வருவான்,  இருக்கும் இடத்தைவிட்டு என்றும் பல்லவிகள் சரணங்களோடு உதயமாயின. ஆள்பவர்களின் அடிபணிவாயாயின் உனக்கு கவிபேரரசு,கவிமாபேரரசு எல்லாம் கிடைத்திருக்கும். “நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா , தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா”  நம்பிக்கை துரோகிகளுக்கோர் கணை. சமத்துவத்திற்கு “அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி… பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் பூமி சிரிக்கும்” . மனிதநேயத்திற்கு “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”  சுட்டிகாட்டினாய்.
எழிலுரை
இயற்கையை கையாளுவதில் கடவுளுக்கு பின் கவிதான். இயற்கையென்னும் கன்னியை வர்ணிக்கும் பால் “அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே,ந‌தி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே! ” , “அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்…..பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன், பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்” கவிஞன் கடவுளுடன் பேசுகிறான். தமிழும் கவியுமாக “நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே….தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே….” வரிகள்.
கண்ணனுரை
யமுனைக் கண்ணனுக்கு கங்கை கரைத் தோட்டம் என்ற பல்லவியை போட்டாலும் பிரசிதம்! . ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதை காணுங்கள் என்றாய் குருவாயூரப்பனை? ஆனால் அவனோ நின்றபடி யிருக்கிறான்! நீங்கள் சொல்ல வந்தது அன்னப் பிரசனம் செய்ய அன்னை முன் அமர்ந்திருக்கும் குட்டி கோபாலர்களை அல்லவா ? அவ்வப்பொழுது கீதையையும், இதிகாசங்களையும், காவியங்களையும், பாசுரங்களையும், பாரதியையும் உமர்கயாமையும் காளிதாசையும் வரிகளில் படைத்தாய்.
ஞான உரை
கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா என்ற ஞானக் கேள்விக்கு  ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது ,அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது, ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது என்றே பதிலளித்தாயே ! நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா  அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா என்ற சித்த மந்திரம் எத்தனை திறம் !  பொதுவுடமையாய் “ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது நீரோடும் பாதைதன்னைக் குறிக்கும் – நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி  ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும் ” சொன்னது உன்னுள்ளும் பாரதி. “உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” ஏகத்தின் அனுபவம். ” தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்,அது தெரியாமல் போனாலே வேதாந்தம்,மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி,என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி,உண்மை என்ன பொய்மை என்ன ?”  என்ன வரிகள்? “படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா”  இன்றைய வாழ்க்கை நெறி.
“சொர்க்கமும் நரகமும் நம் வசமே, நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே…..
சத்தியம் தர்மங்கள் நினைக்கட்டுமே…. இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே” ஒரு சமாதானம்.
முடிவுரை
உங்களுடன் அமர்ந்து என் கவிதைகளை பகிர ரொம்ப ஆசைப் பட்டேன். உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை  காலம் செய்த கோலமய்யா கடவுள் செய்யும் ஜாலமய்யா ! அதற்கு  வாய்ப்பே வரவில்லை.  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைதான். அதற்காக இழந்தா நிற்பது ? நெஞ்சம் மறப்பதில்லை  அது நினைவை இழப்பதில்லை அல்லவா . அதற்காக போனால் போகட்டும் போடா என்று சொல்ல வேண்டாம்.   யார் பெறுவார் அந்த அரியாசனம் கவியரசோடு தனக்கும் ஒரு சரியாசனம் என்றே பாடுவேன். ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது உன்னைப் பார்த்த பின்னால். பார்த்தால்/படித்தால் பசி தீருமா என்று கேட்டால் ஆம் என்பேன் .  எனது பாட்டும் நீ  பாவமும் நீயானாய்.  நலந்தானா ! நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா என்பது என் கைப்பேசி அழைப்பு மணி. காவியப் பேரரசு வாலி படித்து சபாஷ் கொடுத்த இவன் எழுதிய உனக்கோர் இரங்கற்பாவின் வரிகள்
கவிமகள் உன்னையே கணவனாய் எண்ணியே
கற்புடை ம‌ங்கையாய் வாழ்ந்திருந்தாள்
கவிநீ பிரிந்ததால் கண்டவர் நாவிலே
கற்பிழந்து  இங்கே தவிக்கிறாள்
கவியரசு கண்ணதாசனுக்கு இந்த தாசனின் சமர்ப்பணம்.

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்