Saturday, 28 October 2017

பாரதமாதாவும் கண்ணன் அட்டமியும்

(கண்ணன் அட்டமியில் பாரதமாதாவின் துதி…மெட்டு உங்களுக்கு தெரியும்)

கண்ணா! கார்முகில்  நிறவண்ணா!
நீயில்லாமல்  நானில்லையே!
உன்னை  மறப்பேனில்லை!  மறக்க  நினைப்பேனில்லை
என்நிலைப்   பார்த்து   ஏன்நீயும்    விரைவாயில்லை ()

மொழி  பார்த்து   நிலமென்னைப்   பிரித்தார்  கண்ணா
இனம்  பார்த்து  சங்கங்கள்  வளர்ப்பார்  கண்ணா
முகம்பார்த்து    சண்டைகள்   பிடிப்பார்   கண்ணா
மதம்  பார்த்து  சமயத்தில்     வதைப்பார்க்  கண்ணா
பாண்டவராய்  கெளரவராய்  இருந்தார்   கண்ணா – வேடம்
பூண்டவரும்   அதனாலே  வாழ்வார்   கண்ணா()

பணம்சேர்க்க   பிறதேசம்   செல்வார்   கண்ணா
பொருளீட்டி    குடியுரிமை  பெறுவார்  கண்ணா
தாயெனக்கு   அணிசேர்க்க‌  மறந்தார்   கண்ணா
தன்புகழை   முகப்பதிவில்  பதிப்பார்   கண்ணா
எதைச்சொல்லி   புரியவைப்பேன்   சொல்வாய்   கண்ணா
இதற்காக   வாவென்றேன்   வருவாய்   கண்ணா()

படியேறி   முன்னேற   மறுப்பார்   கண்ணா – தள்ளு
படியென்றால்   பெருங்கூட்டம்  சேர்வார்  கண்ணா
உழைப்பென்றால்    ஒருஓரம்   அமர்வார்  கண்ணா – பதவி
உயர்வென்றால்  உரிமைக்கு   நிமிர்வார்    கண்ணா
தங்கத்தை   உடலெங்கும்   தரிப்பார்   கண்ணா – கடமைத்
தங்காமல்   செய்நன்றி   மறப்பார்   கண்ணா ()


பாஞ்சாலி   துகில்தம்மை    உரிப்பார்க்   கண்ணா
கர்ப்பத்தில்   பெண்சிசுவை   கலைப்பார்    கண்ணா
உன்கதையும்   இதுபோல்தான்    அறிவேன்   கண்ணா
என்மக்கள்   என்னுடனே    சேர்ப்பாய்    கண்ணா
இத்தனைநாள்    நீகண்கள்    அயர்ந்தாய்   கண்ணா
இனிப்போதும்   எனக்காக   எழுவாய்    கண்ணா()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்