Saturday, 28 October 2017

கவிஞன் யார்?

கவிஞ‌ன் என்பவன் யாரடி?
காணும்   இலக்கணம் கூறடி !
கலைஞனும் அவனும் ஒன்றடி
அலையெனும் படைப்புகள் காணடி

கவிதைப் படைப்பவன் கவிஞன் தான்
கவிதைப் படிப்பவன் கவிஞன் தான்
கவிதை கொடுப்பவன்  கவிஞன் தான்
கவிதை ரசிப்பவன்  கவிஞன் தான்

மொழியை மதிப்பவன் கவிஞன் தான்
மொழியில் மித‌ப்பவன் கவிஞன் தான்
கலையைக் களிப்பவன் கவிஞன் தான்
கலையைக் காப்பவன் கவிஞன் தான்

எளிமைப் படைப்பினில் கவிஞன் தான்
இனிமைப் படைப்பதும் கவிஞன் தான்
வலிமை வரிகளும் கவிஞன் தான்
வாழ்த்தி இசைப்பதும் கவிஞன் தான்

வடிவம்      பலவும் அவனெடுப்பான்
அதனுள்    இருப்பதை அனுபவிப்பான்
அனுபவந் தானதில் வரிசமைப்பான்
வரிகளில் பாடல்கள் பிர‌சவிப்பான்

காலம்  அவனுக்கு கைகூலி
தனிமை அவனுக்கு பொன்வேலி
காற்று  அவனுக்கு இசைக்கூடம்
கற்பனை அவனுக்கு  விசைக்கூடம்

அறிந்தாயானால் அவன் வெளிச்சம்
அல்லவென்றால் நீயிருட்டு
பழகப்பழக  அவன் புதையல்
விலகவிலக  உனக்கிழப்பு

எழிலைப் பார்த்து அவனாக்கம்
ஏழ்மைப் பார்த்து அவனேக்கம்
இன்னும் ஐயம் தெளியவில்லை?
என்றால் நீயும் வளரவில்லை

தொட்டு பார்த்தா தீயென்பாய்
கட்டிப் பார்த்தா கனலென்பாய்
குதித்து  பார்த்தா கடலென்பாய்
கடித்து  பார்த்தா  கல்லென்பாய்

நிமிர்ந்து பார்க்கையில் களிறென்பாய்
நடந்து   பார்க்கையில் புலியென்பாய்
கலந்து  பார்க்கையில்  மதுவென்பாய்
வியந்து பார்க்கையில் விண்னென்பாய்

கோள்கள் ஆயிரம்  இருந்தாலும்
அதிலே புவிபோல் வாழ்வுண்டோ
படிப்பும் பதவியும் பெற்றாலும்
வாழ்த்தாதிருப்பதில் வாழ்வுண்டோ

மொழியை வளர்ப்பவன் நீயாயின்
மொழியின் படைப்பினை ரசிக்காமல்
மனிதரை பார்த்து  புகழுரைத்தால்
மறைமுக மான அசிங்கமிது.

கொடுக்கும் மேகத்தை பழிக்காதே
ஆடும்மயில் திசை பொழியுமது
கெடுக்கும் மமதையில் இருக்காதே
ஆடும்வரையது அழிக்குமது!

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்