Friday, 5 January 2024

ஸ்ரீராஜபாலமுருகா

கணநாதன் கணேசன் கற்கண்டு தம்பியே கந்தனே செந்தில்நாதா
குணசீலன் மாமனாய் கொண்டாடும் பாலனே குங்கும வண்ணமார்பா 
பணமாலைகள் சூடும் மாமியாம் திருமகள் கட்டியே கொஞ்சுழகா
மனதோடு என்னோடு இருந்துவிடு மற்றெல்லா விளையாட்டும் விளையாடலாம்
மலைமீது ஏறாமல் மயிலோடு வந்தனைநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...1

ஏனிப்பிறவி என்கின்றபோது அதற்கென்ன பதிலுமில்லை 
வீணென்று நினைத்தால் விடியாத நாளாகும் முடிவில்லா பயணமில்லை
இயக்கமும் ஆக்கமும் முயற்சியும் விட்டுபய
அழற்சியில் வாழ்தல்நலமோ
கலக்கமும் தயக்கமும் குழப்பமும் மயக்கமும் வேலாலே அழிக்கவருவாய் 
மலைமீது ஏறாமல் மயிலோடு வந்தனைநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...2


சேயென் தலையெழுத்து தாயீன்ற  நேரம் 
தாயின் தலையெழுத்து தந்தையை சேரும்
தந்தை தலையெழுத்து பிரம்மனின் கைகோல் 
பிரம்மன் சிரங்களோ உன் வேலின்  கீழன்றோ
மலைமீது ஏறாமல் மயிலோடு வந்தனைநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...3

எட்டு திக்காக அழைத்துமே 
உன்செவியில் ஏதுமே விழவில்லையா 
ஏழு சுவரமாக பாடியும்நீ 
ரசிக்காது மனமில்லையோ 
ஆறு காலமும் ஆறுமுகாவென 
அழுவதும் இரக்கமிலையோ 
ஐந்து நிலமெல்லாம் குன்றேறியே அடியேனை காணவில்லையோ 
மலைமீது ஏறாது மயிலோடு வந்திடுநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...4

மாங்கனி கிடைக்காமல் போனதற்காக மலையிலே ஆண்டியானாய்
தேங்கனி வள்ளியை காதலால் வசப்படுத்த கிழவனாய் வேடனனாய் 
தூங்கா தேவரின் துயர் தீர்க்கவோ வேலேந்தி வீரனனாய் கந்தனனாய்
தாங்காத துயரோடு பாடுவேன் விளையாட்டாய் மறைந்துமே ஆடல் அழகோ 
மலைமீது ஏறாது மயிலோடு வந்திடுநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...5

வீணானப் பொருளாயின் வேண்டாமென வெளியிலே வீசிவிடுவார் 
காணாதப் பொருளாயின் கண்திருஷ்டி போனதென கண்மூடி தான்கழிப்பார் 
பாழானப் பொருளென்றே பண்டத்தை வழித்தெடுத்து பேயாற்றில் விட்டு எறிவார் 
பாட்டாலே பாடியுனை படாதபாடு செய்வேனோ குகசுவாமியே 
மலைமீது ஏறாது மயிலோடு வந்திடுநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...6


மடியினில் எடுத்தெனை

மடியினில் எடுத்தெனை யாழென மீட்டு
தமிழதன் தவமெனப் பேற்றினைக் கூட்டு ()

படித்திடும் பார்வையும் 
பயின்றிடும் வார்த்தையும்
நிலைத்திடும்படி யினி 
செய்வதுன் பொறுப்பு 
கிடைத்திடும் திறமையும்
நிலைத்திடும் பெறுமையும் 
அருளிடும் அமைதியும்
வாணிநின் சிறப்பு ()

வழங்கிடும் வாய்மையும்
வெள்ளுடைத் தூய்மையும்
செல்வமும் சொல்வளம் 
வந்திடும் ஏற்று 
இன்னுயிர் உன்னிடம்
உன்துதி என்னிடம்
கண்கடை காட்டியே
நாவினில் ஊற்று ()

பால முருகன் சிரிப்பு

பால முருகன் சிரிப்பு 
பவழக்கொடி மலர்ந்த முத்துக்களின் களிப்பு ()

கோலமயில் மீது வலம் வருவான்
கும்பிடும் முன்னாலே அருள் தருவான்
வாவென் றழைத்தவுடன் வளம் தருவான்
தாவெனத் தமிழ் கேட்டு தரிசனம் தருவான் ()

வேலுடன் தரும் காட்சி மனம் நிறைக்கும்
சேலமும் சீலமும் குறை கலைக்கும்
மாலுடன் மருமகனே நம்பிக்கை பிறக்கும்
நாளுடன் நவக்கோளும் நல்லதெலாம் அளிக்கும் ()

காக்க நீயிருக்க கவலைகள்

காக்க நீயிருக்க கவலைகள் எனக்கெதற்கு 
பார்க்க பார்க்க எனை பரவசமே உனக்கு   ()

நீக்கமற நெஞ்சிலே அமர்ந்தவனே  முருகா நீ
நினைத்தபடி நல்லவை நிகழ்ந்திட அருள் புரிவாய் ()

சுயமாய் வந்தருளி வளரும் ராஜபாலா 
சுயமாலயம் அலங்கரிக்கும் உமைக்குமரா 
வேலுடன் மயிலோடு தரிசனம் தயையுனக்கு
தேவைகள் அறிந்துடனே தருவாய் வளமெனக்கு  ()

சமர்ப்பணம் ....சத்தியமணி

சரவணபவனெனும்

சரவணபவனெனும் போது
கரைந்திடும் மனது கவலைகள் மறைந்து ()

அலைகளில் செந்தூர் 
அருவியில் திருக்குன்றம் 
அமைதியில் பழனி 
அருளினில் சுவாமியென ()

மருந்திட மருதம்
அருந்திட தணிகை
கனிந்திட சோலையென 
நினைந்திட வேலவனை ()

அறுபடை அமர்ந்து
அசுரரை அழித்து 
பக்தரைக் காக்க
வேலும் மயிலுடனே ()
சமர்ப்பணம் சத்தியமணி
05-11-23

ஆறுதலைத் தந்தால்

ஆறுதலைத் தந்தால் போதுமா...கால
மாறுதலுக் கேற்ப எனைக் காக்க வேண்டாமா  ()

தேறுதல் அறியாமல் தினமும் தேர்வுகளா  
தீர்வுகள் தரும் வேலும் மயிலுடன் துணைக்கு வா   ()

ஏறுதல் மயில்மீதும் இறங்குதல்  அறிவாயே  
பாடுதல் என் பணியாய் பாராள விடுவாயே 
வாடுதல் இல்லாமல் வாழ்ந்திட அருள்வாயே 
நாடுதல்  உன்னடியே திரு
செந்தூர் பெருமாளே  ()

சமர்ப்பணம் சத்தியமணி
07-11-23

ஆனைக் காவினில்

ஆனைக் காவினில் அன்னையின் கருணை 
பாவவினைப் போக்கும் 
சௌபாக்கியம்  தினங்களிக்கும் ()

தாமரை முகமும் புன்னகை இதழும் தேவையெலாம் அளிக்கும் 
மனத் தெளிவுடன் வழி பிறக்கும் ()

தும்பிக்கை தூக்கிட வல்லப கணபதி வாசலிலே அழைப்பான் 
சிம்மமும் ஆசனம் செய்திட தர்மத்தை சீர்திருத்த அருள்வான் ()

பெற்றவள் பிள்ளையைக் கற்றவ னாக்கியே  சிறப்புகளைத் தருவாள்
நற்றமிழ் நாவினில் நல்லு றவாடியே 
வாக்குகளைத் தருவாள்
கீர்த்தியும் புகழும் நல்லுற வாயிரம் நம்படை யாகிடுமே 
சேர்த்திட அகிலாண் டேஸ்வரி நல்லறம் 
நிம்மதி நிறைத்திடுமே ()

சமர்ப்பணம் சத்தியமணி 06-11-23


தருணமிது எனைக் காக்க

தருணமிது எனைக் காக்க வேண்டும் 
கருணையுடன் அம்மா அகிலாண்டேஸ்வரி ()

மரணமில்லா பிறவி தருபவளே உன்
மடியினில் அமரவைத்து யாழெனை மீட்டிடவே  ()

நாக்கினில் வாக்கெனவே வலம்வர கலைமகளே தொலை
நோக்கினில் தோளேற்றி கிளியெனைக் கொஞ்சிடவே ()
தனமுடன் தர்ம மனதுடன் வாழ்வினிக்க 
தினமுனைத் துதிபாட சீக்கிரம் வரம் தரவே ()
சமர்ப்பித்த சத்தியமணி 08-11

வீடொன்று தரவேண்டும்

வீடொன்று தரவேண்டும் வேலவா  உன்னைக்
குளிப்பாட்டி அழகூட்டி துதிபாடவே ()

படை வீடு  ஆறும் பெற்றவன் நீயல்லவா  உன்
கடை விழியும் மொழி வழியும் சுகவீடும்  தருமல்லவா ()

இருக்கின்ற தனத்திற்கு ஏற்றாற்போல் நல்லிடத்தில்
ஏய்ப்போரும் வேலதனால் 
தயையோடு நல்லறத்தில்
வில்லங்கம் இல்லாது
நீவாங்கி  தரவேண்டும்
இல்லத்தில் உள்ளத்தில் நிறைவோடு நீவேண்டும் ()
சமர்ப்பணம் சத்தியமணி 091123

ஒன்றுமே எனக்கு தெரியாது

ஒன்றுமே எனக்கு தெரியாது 
உள்மனம் உனையன்றி ஏதுமறியாது. 
என்றுமே எதிலும் நிறைவடையாது 
குன்று மீதடைந்தேன் சுவாமிநாதா ()

அன்றுமே பழனியில் ஆண்டியாய் நின்றாலும்
அசுரரை வதம் செய்தாய்
செந்தூர் வடிவேலா 
நன்றுமே நிகழ்ந்திடும் 
பன்னிரு விழிகளிலே 
என்னையும் காணாயா
உமைமகள் சிவக்குமரா ()

கலியுகப் பழியென்கோ 
கர்மபெரு  வினையென்கோ 
பிறவி யெடுத்துவிட்டு
பிழையாகப் பிழைப்பதுவோ 
கருவியாய் எனைஇயக்கு 
கற்றதெலா முன்கணக்கு 
அறிவாய்  ஆறுமுகா 
ஆண்டருள் தமிழுனக்கு ()
சமர்ப்பணம் சத்தியமணி

விடியும் தீபாவளி

ஒளி வண்ணம் கண்டு 
களிப்பென்ற ஒன்று 
வழி காட்டும் என்று 
வாழ்த்துவோம் இன்று
 
புத்தாடை அணிந்து 
உற்சாகம் அடைந்து 
அன்போடு இணைந்து
வாழ்த்துவோம் இன்று 

மாசில்லா சுவாசம் 
துகளாக  துவேசம்
கங்கையே பிரவேசம்
நேசத்தின் சந்தேசம் 

புகையாத  வளியும் 
பகையிலா விழியும் 
நட்ப்போடு மொழியும் 
நிறைவோடு விடியும் தீபாவளி
..சத்தியமணி  11-11-23

வண்ணங்கள் வடிவினில்

வண்ணங்கள் வடிவினில் முருகன்  சிரிக்கிறான்
எண்ணங்கள் வரியினில் இசைத்து கேட்கிறான் 
செந்தமிழ் அவனுக்கு உமைப்பாலாம் 
செவியினில் கேட்டதெலாம் கொடுப்பானாம் ()

செந்நிற மாகிவிடின் கதிர்வேலன் 
வெண்ணீறு குளித்திலே சிவபாலன் 
நீலமயில் மீதேறும் சுகுமாரன்
பச்சைவளக் குறிஞ்சிக்கு தவசீலன் ()

மஞ்சள் பட்டணிந்தான் திருமுருகன்
கருஞ்சிகை அலங்கார
இளங்குமரன்
தீபவொளி யதினில் அருள் பொழிவான்
பாவவினை களையும் உடன் கலைவான்  ()

சமர்ப்பணம் சத்தியமணி 151123

கஷ்டமெல்லாம் போக்கும்

கஷ்டமெல்லாம் போக்கும் சஷ்டியில் நோன்பிருப்போம் 
நஷ்டமெல்லாம் நீங்கும்பால
முருகனை துதிசெய்வோம்()

இஷ்டமெல்லாம் கேட்டே இன்னல்கள் தீர்ப்பான் 
சுயமாய் மயிலமர்ந்து 
சுகமெல்லாம் கொடுப்பான்()

சரவணபவ னென்றே 
சரணம் அடைந்து விடு 
வருகின்ற வாழ்வதற்கு 
வரமளிக்க படைவீடு 
வேலுடன் மயிலிருக்க
அச்சமிலை நமக்கு 
வாளுடன் பகையழிக்க
பாலசுப்பிரமணி துணைக்கு
சமர்ப்பணம் சத்தியமணி

வேலனுக்கு செவிமடுக்க

வேலனுக்கு செவிமடுக்க கேட்கும் உமையே  இந்த
பாலனுக்கு தயைசெய தயக்கமோ 
நாளொரு துடிப்பினில் சங்கடமோ
கேளிக்கையோ மனம் இரங்குமோ  () 

தாய்மைக்கும் மேலொறு சிறப்புளதோ 
தவிப்படக்க தாமதம் நகைப்புனதோ ()

தோளினில் தத்தையாய் அமர்ந்திடினும் 
காலினில் மணியாய் சிணுங்கிடினும் 
மார்பினில் முத்தாய் சிரித்திடினும் 
மகுடத்தில் எனக்கோர் இடம் தரணும் அம்மா ()
சமர்ப்பணம் சத்தியமணி 181123