Sunday, 14 May 2023

அன்னை மகிமை (2021)

எத்தனை அடைந்தாலும் நிறைக்காதம்மா

அத்தனை உறவுகளும் உனக்காகுமா

உனக்கே நிகராகுமா () 


உனக்கென நான் கிடைத்தேன்

எனக்கென நீ கிடைத்தாய்

தவமெனத் தான் சுமந்தாய்

தயவுடன் தாங்கி நின்றாய்

என்னுடன் நிதம் அமர்ந்தாய்

இன்முகம் தினம் கொடுத்தாய்

கவிதைகள் எழுத வைத்தாய்

களித்தபின் தலை முகர்ந்தாய்

அத்தனை நினைவுகளும் மறக்காதம்மா

எத்தனை பிறவிகளும் பிரிக்காதம்மா ()


தூளியில் துயிலளித்தாய்

தோளினில் இதமளித்தாய்

பைந்தமிழ்ப் பாசுரங்கள்

பாலினில் நீ சுரந்தாய்

அன்பினில் வளரவைத்தாய்

அறவழித் தெளியவைத்தாய் 

பண்புடன் பயிலவைத்தாய்

பாரினில் பழகவைத்தாய்

உதவிடும் குணமளித்தாய் தொடர்வேனம்மா

உயர்ந்திட வழிவகுத்தாய் சிறப்பேனம்மா ()


தாயினும் உயர்வுண்டோ

தாயகம்!! அயர்வுண்டோ

பிறவியின் பயனுண்டோ

பிழைப் பொறுத்தருளுண்டோ

கயமை விலக்கச் சொன்னாய்

மெய்மை விளக்கி சென்றாய்

நன்நெறி புரிய வைத்தாய்

நலங்களைக் குவியத்தந்தாய்

நனவினில் பிரிந்தே நீ சென்றாயம்மா

நினைவினில் நிறைந்தேநீ காப்பாயம்மா ()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்