பெற்றவள் பாலூட்ட பெற்றவன் பெயர்கூற குற்றமிலாது பிறந்தும்
கற்றவர் கூட்டத்தில் வகுப்பில் படித்தாலும் மதிப்பெண்கள் இருந்தும்
மற்றவரை சேர்த்து நற்தொழிற் திறமையெலாம் காட்டியும் பயனுமில்லை
இற்றுநிலை ஆனபினும் அகங்கார கலிமாயம் போரிடவும் பலமுமில்லை
அழகான மயில்தோகை விரித்தாட பவனிவரும் குருநாதா சுவாமிநாதா
அமுதான சரவண பவனென்றேனடா உபதேசம் விரைந்து தாராய் ...1
காலமும் தெரியாது காரணம் புரியாது கலங்கியே அழுதபோது
சூலமும் வேலுமுடன் சகலமும் ஏந்திய உன்னிடம் வந்தபின்னே
நாளிலே எதுவரினும் அஞ்சாமல் உறுதியாய் என்நெஞ்சின் கவசமாகி
தோளிலே சரியான பாதையில் துணையாகி வெற்றி சொல்வாய்
அழகான மயில்தோகை விரித்தாட பவனிவரும் குருநாதா சுவாமிநாதா
அமுதான சரவண பவனென்றேனடா உபதேசம் விரைந்து தாராய் ...2
செய்யாமல் வேலையிலே சம்பளம் வாங்குவது சிலபேரின் திறமையாமோ
செய்யாமல் வேலையினை பிறர்மீது போட்டுவிடல் சிலபேரின் திறனுமாமோ
செய்யாமல் பிறருடைய உழைப்பினை தனதாக காட்டுதல் அறமுமாமோ
செய்யாமல் அத்தனையும் தனதாக்கி தன்னலமாய் வாழுதல் அதிர்ஷ்டமாமோ
அழகான மயில்தோகை விரித்தாட பவனிவரும் குருநாதா சுவாமிநாதா
அமுதான சரவண பவனென்றேனடா உபதேசம் விரைந்து தாராய் ...3
துதிபாடி நீராடி தூய்மை ஆடையுடன் எளிமையும் வறுமையோடு
களவாடி பொய்கூறி எதிர்மறை வினையோடு இருக்கிறார் வளமையோடு
அல்லாடி திண்டாடி அரைவயிறு தான்நிரப்ப உழைக்கிறார் கர்மமாமோ
தள்ளாடி போதையிலே நடுவீதி பாதையிலே அரசாவார் தர்மமோ
அழகான மயில்தோகை விரித்தாட பவனிவரும் குருநாதா சுவாமிநாதா
அமுதான சரவண பவனென்றேனடா உபதேசம் விரைந்து தாராய் ...4
