இனிய மின் இணையத் தோழர்களுக்கு வணக்கங்கள். பொழுது போக்காக எழுதியவற்றை இங்கே பதிப்பித்துள்ளேன். படியுங்கள்.ரசியுங்கள். உங்களின் உள்ளே கிடைத்த எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள். அப்போதுதான் உங்களின் ரசனை அறிந்து என்னால் இன்னும் சமர்ப்பிக்க முடியும். இது தான் அபிமான ரசிகர்களுடன் ரகசியமான ஒப்பந்தம். சரியா ? நன்றி. வாழியத் தமிழ் ! வளர்க பாரதம் !
Pages
- Home
- யாரிவன் [ Who is this ]
- கர்ப்பித்த கவிதைகள் [ Poems from Her blessings ]
- கிறுக்கல்கள் [ Cartoons by hand and digital ]
- இசையும் நமக்கு அசையும் [Piano Melodies ]
- மனமுதிரும் மொழி ( Language of the Heart )
- ஆத்மனின் பயணம் ( Upasana a Spiritual Journey )
- ஜோதிடம் நடைமுறையில் அணுகுமுறை [ Astrology - Practical Approach ]
Saturday, 7 October 2023
வேலவா
Friday, 26 May 2023
உபதேசம் விரைந்து தாராய்
பெற்றவள் பாலூட்ட பெற்றவன் பெயர்கூற குற்றமிலாது பிறந்தும்
கற்றவர் கூட்டத்தில் வகுப்பில் படித்தாலும் மதிப்பெண்கள் இருந்தும்
மற்றவரை சேர்த்து நற்தொழிற் திறமையெலாம் காட்டியும் பயனுமில்லை
இற்றுநிலை ஆனபினும் அகங்கார கலிமாயம் போரிடவும் பலமுமில்லை
அழகான மயில்தோகை விரித்தாட பவனிவரும் குருநாதா சுவாமிநாதா
அமுதான சரவண பவனென்றேனடா உபதேசம் விரைந்து தாராய் ...1
காலமும் தெரியாது காரணம் புரியாது கலங்கியே அழுதபோது
சூலமும் வேலுமுடன் சகலமும் ஏந்திய உன்னிடம் வந்தபின்னே
நாளிலே எதுவரினும் அஞ்சாமல் உறுதியாய் என்நெஞ்சின் கவசமாகி
தோளிலே சரியான பாதையில் துணையாகி வெற்றி சொல்வாய்
அழகான மயில்தோகை விரித்தாட பவனிவரும் குருநாதா சுவாமிநாதா
அமுதான சரவண பவனென்றேனடா உபதேசம் விரைந்து தாராய் ...2
செய்யாமல் வேலையிலே சம்பளம் வாங்குவது சிலபேரின் திறமையாமோ
செய்யாமல் வேலையினை பிறர்மீது போட்டுவிடல் சிலபேரின் திறனுமாமோ
செய்யாமல் பிறருடைய உழைப்பினை தனதாக காட்டுதல் அறமுமாமோ
செய்யாமல் அத்தனையும் தனதாக்கி தன்னலமாய் வாழுதல் அதிர்ஷ்டமாமோ
அழகான மயில்தோகை விரித்தாட பவனிவரும் குருநாதா சுவாமிநாதா
அமுதான சரவண பவனென்றேனடா உபதேசம் விரைந்து தாராய் ...3
துதிபாடி நீராடி தூய்மை ஆடையுடன் எளிமையும் வறுமையோடு
களவாடி பொய்கூறி எதிர்மறை வினையோடு இருக்கிறார் வளமையோடு
அல்லாடி திண்டாடி அரைவயிறு தான்நிரப்ப உழைக்கிறார் கர்மமாமோ
தள்ளாடி போதையிலே நடுவீதி பாதையிலே அரசாவார் தர்மமோ
அழகான மயில்தோகை விரித்தாட பவனிவரும் குருநாதா சுவாமிநாதா
அமுதான சரவண பவனென்றேனடா உபதேசம் விரைந்து தாராய் ...4
Thursday, 25 May 2023
கடனும் பாவமும்
தாயார் கடன் பெற்று விட்டாள்
தந்தை கடன் வளர்த்து விட்டார்
குருவின் கடன் படிப்பு தந்தார்
நாட்டின் கடனை யார் தீர்ப்பார் ()
யாரோ கட்டிய நதி கரைகள்
அசுத்த படுத்திய அபராதம்
யாரோ கட்டிய கோயில்களை
கொள்ளை யிடிக்க அபராதம்
யாரோ கட்டிய சாலைகளில்
தோண்டி பள்ளமும் அபராதம்
யாரோ கட்டிய மன்றங்களில்
குடித்தனம் கொள்ளை அபராதம்
கடனை ஏற்றும் வழியிவைகள்
கடலும் கங்கையும் போக்காது ()
செல்வம் சேர்ந்த பின்னாலே
பெற்றவர்களை உடன் மறப்போரும்
பதவி யாசை புறங்கையூடல்
பணத்தை நகைகள் வைப்போரும்
பொதுநலச் சொத்து அழிப்போரும்
பிறர்வழி பாடுகளை இடிப்போரும்
பெண்களை ஏய்த்து மணப்போரும்
பிள்ளையை கெடுத்து வளப்போரும்
கடனைத் தீர்க்க முடியாது
கடவுளை மறுத்தால் விடுவானா ?
காலன் அழைக்கும் போதிவரின்
காசோலை களுமே செல்லாது
கூப்பிட உடனே வருபவரும்
கூட வந்திட முடியாது
கட்சி கட்டை எரியுமுன்னே
தலைமை பதவி இருக்காது
கொள்ளை களவு பயின்றதனால்
அறநெறி வாசனைத் தெரியாது
பிரிவினை நரியென செய்வதெல்லாம்
கடவுள் சபையினில் தப்பாது
பதவியின் வெறியினில் செய்ததனால்
பாவம் புதைத்தும் மறக்காது
Wednesday, 24 May 2023
மகமாயி
வாடி நிற்கும் வேளையிலே வலிமைத் தருபவளே
ஓடி வந்துடன் காப்பவளே மாமகமாயி உமையவளே
தேடி உன்னிடம் சரணம் அடைந்தேன் துயரம் தனைவிலக்கு
பாடி துதித்திடும் பிள்ளையைப்பார் மனமிளகாதா உனக்கு ()
ஈன்ற அன்னைகள் பலரிருக்க
அம்மா என்றால் நீ தானே
நீண்ட வறுமையும் பசிநீக்கும்
ஆத்தா என்றால் நீ தானே
வேப்பிலை போல நோய்தீர்க்கும்
மூலிகை மஞ்சள் ஆனவளே
சாப்பிடும் கஞ்சியும் கூழானாலும்
அமுதாய் ஏழைக்கு ஆனவளே
ஏமாற்று காரரிடமிருந்து
சடுதியில் என்னைக் காப்பாயா
வஞ்சக காரரிடமிருந்து
விரைந்து என்னைக் காப்பாயா
உதவி செய்வார் யாருமில்லை
உண்மை அனைத்தும் நீதானே
பதவி செல்வம் ஆயுளுமே
தருவதும் காப்பதும் நீதானே
Tuesday, 23 May 2023
திருவாழ் மொழி
ஓமெனும் மூலம் ஒளிந்திடும் மூலம்
விரிந்திடும் மூலம் ஒடுங்கிடும் மூலம்
வெளியெனும் மூலம் உள்ளெனும் மூலம்
ஒலியெனும் மூலம் ஒளியெனும் மூலம்
கருவெனும் மூலம் திருவெனும் மூலம்
உருவெனும் மூலம் அருவெனும் மூலம்
மூச்செனும் மூலம் முதிர்ந்திடும் மூலம்
கம்மெனும் மூலம் கணபதி தானே 1/100
ஒன்றென தெரிவான் இரண்டென தெரிவான்
உருவென தெரிவான் அருவெனத் தெரிவான்
மறைந்திட தெரிவான் தெரிந்திட தெரிவான்
மூடினும் தெரிவான் திறப்பினும் தெரிவான்
அடியினில் தெரிவான் முடியினில் தெரிவான்
யாகத்தில் தெரிவான் யோகத்தில் தெரிவான்
நிட்டையில் தெரிவான் நெற்றியில் தெரிவான்
வெற்றியில் தெரிவான் வேலவன் தானே 2/100
ஓர்மையில் வசி நேர்மையில் வசி
உள்ளிலே வசி உருவிலே வசி
அடக்கியும் வசி இயக்கியும் வசி
கதிரினில் வசி மதியினில் வசி
பிரித்திட வசி சேர்த்திட வசி
அறிந்திட வசி மறைந்திட வசி
மலையினில் வசி குகையினுள் வசி
ஓமென வசி ஒளிதரும் சிவமே ...... 3/100
அன்னையே சக்தி பிள்ளையும் சக்தி
சேர்ந்தவள் சக்தி ஈன்றவள் சக்தி
இயக்கமும் சக்தி மயக்கமும் சக்தி
சிந்தையும் சக்தி செயல்திறன் சக்தி
காலமும் சக்தி நேரமும் சக்தி
காரணம் சக்தி கலைகளும் சக்தி
களிப்பும் சக்தி காப்பாயும் சக்தி
அன்பும் சக்தி ஆனந்தம் சக்தி
அமுதமும் சக்தி அன்னையே சக்தி 4/100
தவழ்வது அறிவு
பார்ப்பது அறிவு
உறவினை அறிந்து
உணர்வது அறிவு
கற்பது அறிவு
கேட்பது அறிவு
படிப்பது அறிவு
நடப்பது அறிவு
தேர்வது அறிவு
தெளிவது அறிவு
நல்லறம் பயின்று
நூல்கள் பயிலினும்
நட்பினை அறிந்து
வாழ்தல் பேரரறிவே ....5/100
ஆய்வு இலாத நாளை
ஓய்வு இலாத ஆசை
சாய்வு இலாத பதவி
வாய்வு இலாத வயிறு தேய்வு இலாத செல்வம் தோய்வு இலாத கர்வம்
காயம் இலாத காயம்
சாயம் இலாத ஆடை
நியாயம் இலாத நீதி
நேயம் இலாத சாதி
மாய்வு இலாத மாயை
பேயுடன் வாழும் பிரேதமே
....8/100
Thursday, 18 May 2023
குரு பாதுகை குறள்
திருவாகி வந்தென் குற்றம் துடைப்பார்
உருவாகி ஊட்டும் குரு
மாயவிளை யாடல்தமை மதிவீழ செய்யாது
காயமெலாம் காக்கும் குரு
ஆனந்த ஆனந்த ஆனந்த பொழிவாகி
தானந்த மாகிடும் குரு
துன்பம் கொடுத்து துயரம் தனைமாற
இன்பம் கொடுக்கும் குரு
பிறவிகள் அறுக்க பித்தமெலாம் அழிக்க
அருவிகள் அருளாக குரு
பிழையோ பாவமோ பித்தமோ பிணிநீக்க
மழையாக மந்திரம் குரு
ஞானமும் நல்லறிவு சாதுர்யம் தன்னடக்கம்
தானங்க மாகிடும் குரு
தெரியாது புரியாது தவித்திடும் நிலைமாற
குறையாத வளந்தான் குரு
வித்தை கற்பித்து சத்தை தெளிவிக்க
சித்தியுள் நிறைந்த குரு
முடியாத காரியம் விதியென காரணம்
அடியாலே நிகழ்த்தும் குரு
ஒழுக்கம் தவநெறி நல்லறம் பாக்கியம்
வழங்கும் பகவான் குரு
Wednesday, 17 May 2023
காத்திடு வேலாய்
குறையிலா பொன்னென மாற்றிடு மணியாய்
நிறைவொடு மாலையாய் ஏற்றிடு அணியாய் !
களிப்புடன் கந்தனே குமரனே அறியாய்
களைப்புறு வேனெனை காத்திடும் வேலாய் ()
மறைமுகம் எனக்கில்லை மறை முகமானாய்
துறைமுகம் பொற்றடி நாவியில் சேராய்
அறிமுகம் செய்தெனைக் கரிமுகத் தூணாய்
கறைமுகங் காணாது காத்திடும் வேலாய் ()
அலையென மனமாட அகந்தை பந்தாட
இலையென காற்றாட இன்பமும் அற்றாட
நிலையென நானில்லை விரயமாய் நாளில்லை
மலையென நம்பினோம் காத்திடு வேலாய்()
சுழன்றிடும் புவிமதி சுற்றிடும் கோளாய்
சுழன்றிடும் விதிவழி பிறவிகள் ஆனாய்
சுழன்றிட வேல்தனை செலுத்திடு வீராய்
சுழன்றிடும் பிணியறு காத்திடு வேலாய் ()
Tuesday, 16 May 2023
மயில்மேல்
நெற்றியில் திருநீறும்
நெஞ்சினில் மயில்வேலும்
நாவினில் சரவணபவனென்றேன்
நாளெல்லாம் வெற்றிதான்
நாளெல்லாம் வெற்றிதான் ()
ஓமெனும் பிரணவம்
நாமென்று சொன்னவன்
தந்தைக்கே சுவாமியாய்
அருமந்திரம் தந்தவன்
குன்றத்தில் இருந்தாலும்
குமரனாய் இருந்தாளும்
சண்முகா சரவணனே
சடுதியில் காத்திடப்பா ()
குருவாய் வருவாயோ
ஒருவாய் மலர்வாயோ
கருவாய் கவிபடித்தும்
காத்திட வைப்பாயோ
குற்றங்கள் செய்தாலும்
மன்னித்து மறைப்பாயோ
குறைகளும் வாராமல்
குடைகொண்டு காப்பாயோ ()
முருகா முருகாவென
செவிகளில் சேர்ப்பதற்கு
உருகிட தமிழ்தூது
அருளுடன் விரைவதற்கு
சங்கரா சிவ சிவா
சண்முகா சரவணா
இனிதாமதம் எதற்கு
மயில்மேல் வருவதற்கு
()
Sunday, 14 May 2023
எழுமலை துதி
விளையாட வேங்கடவன் வெற்றிகள் கொடுக்க
வளையாட திருமகள் வசம்.....1
திருமலை எழுந்தருளி அருள்மழை பொழிவான்
திருமகள் நனைப்பாள் நமை....2
ஏழேழு பிறவிக்கும் பலனாய் விளைந்தான்
நாளேழும் மங்களம் தரும்.....3
அழகன் பவனி உலா (சத்தியமணி)
மனக்குதிரை மேல்ஏறி மண்குதிரை தானடக்கி
அக்குதிரை அகங்காரம் அன்புடன் தானொடுக்கி
பொற்குதிரை ஆக்கியதை புலனடங்க மேயவைத்த
நெற்குதிரில் பொற்குவிய மாற்சோலை அழகனாமே ...........1
சாட்டை யெடுத்து சண்டித் தனமெலாம்
வேட்டை ஆடவைத்து வெகுளியில் ஆறவைத்து
கேட்டை அழித்து கோட்டைக் கதிபதியாய்
ஏட்டை எழுதியவன் மாற்சோலை அழகனாமே....2
தங்கை கைபிடித்து கன்னிகைத் தானமிட
கங்கை வைகையதை கடிவாளம் பிடித்தபடி
நங்கை திருமகள் நகையதை அணிந்திடவே
இங்கே விரைந்தோன் மாற்சோலை அழகனாமே....3
அன்னை மகிமை (2021)
எத்தனை அடைந்தாலும் நிறைக்காதம்மா
அத்தனை உறவுகளும் உனக்காகுமா
உனக்கே நிகராகுமா ()
உனக்கென நான் கிடைத்தேன்
எனக்கென நீ கிடைத்தாய்
தவமெனத் தான் சுமந்தாய்
தயவுடன் தாங்கி நின்றாய்
என்னுடன் நிதம் அமர்ந்தாய்
இன்முகம் தினம் கொடுத்தாய்
கவிதைகள் எழுத வைத்தாய்
களித்தபின் தலை முகர்ந்தாய்
அத்தனை நினைவுகளும் மறக்காதம்மா
எத்தனை பிறவிகளும் பிரிக்காதம்மா ()
தூளியில் துயிலளித்தாய்
தோளினில் இதமளித்தாய்
பைந்தமிழ்ப் பாசுரங்கள்
பாலினில் நீ சுரந்தாய்
அன்பினில் வளரவைத்தாய்
அறவழித் தெளியவைத்தாய்
பண்புடன் பயிலவைத்தாய்
பாரினில் பழகவைத்தாய்
உதவிடும் குணமளித்தாய் தொடர்வேனம்மா
உயர்ந்திட வழிவகுத்தாய் சிறப்பேனம்மா ()
தாயினும் உயர்வுண்டோ
தாயகம்!! அயர்வுண்டோ
பிறவியின் பயனுண்டோ
பிழைப் பொறுத்தருளுண்டோ
கயமை விலக்கச் சொன்னாய்
மெய்மை விளக்கி சென்றாய்
நன்நெறி புரிய வைத்தாய்
நலங்களைக் குவியத்தந்தாய்
நனவினில் பிரிந்தே நீ சென்றாயம்மா
நினைவினில் நிறைந்தேநீ காப்பாயம்மா ()
கலியுக குறள் அதிகாரம் தமிழ்ச் சங்கம்
தமிழ் விருப்பில் வளர்வதோ சங்கமிலை
தமிழ் விடுப்பிலோ எது ?.......1
இரந்து வாழ்ந்து வளர்த்தார் பெருநிதி
இறந்த பின்னும் வருமோ......2
கோட்டைக்கு அரசர் நாட்டுக்கு மந்திரி
கூட்டை விட்டதும் யார்........3
குற்றேவல் சேவகர் கூட்டமும் குட்டமாம்
குற்றமாய் செய்த வினை ......4
நான்மறை இழித்தோர் அறமுறை அறுத்தோர்
வான்முறை வன்முறை யாகும்....5
இறந்தவரை மாலையிட்டார் மேடையிட்டார் புகழ்ந்தார்
இருப்பவரோ அரங்கத்து ஓரம்...6
தத்திதத்தி பேசிடும் தலைவர் தமிழில்
தத்தளித்த சங்கத்தில் சபை ....7
புகழும் பொன்னாரம் பொற்சார்வை பூங்கொத்து
பழகும் தினசரி படம்......8
கைபிடிக்க கால்பிடிக்க கடைபிடிக்க குடைபிடிக்க
பைபிடித்தால் செயலாளர் பணி....9
தாய்மொழி தத்தளிக்க வாய்மொழி தப்பளிக்க
சேய்மொழி எப்படி தேறும்......10
சரோஜினி நகர் குடமுழுக்கு கோலாகலம்
சித்தியும் புத்தியும் சக்தியும் தருவான்
வித்தையே விநாயகன் அருள்.....1
கற்பனை கட்டும் கவிதையை கொட்டும்
விற்பனன் விநாயகன் அருள்....2
அருகம் புல்லெடுத்து அர்ச்சனை செய்யினும்
கனகமாய் விநாயகன் அருள்....3
நம்பிக்கை வேண்டும் நல்லறம் தூண்டும்
தும்பிக்கை விநாயகன் அருள்..4
சிதறிடும் தேங்காயில் தீறாத தீவினையோ
கதறிடும் விநாயகன் அருள்...5
வெற்றிகள் தேடிவரும் தொட்டது கைதுலங்க
பற்றுவீர் விநாயகன் அருள்.....6
தர்மவினைக் காப்பாற்ற கர்மம்வினைக் கைதூக்க
நற்பவி விநாயகன் அருள்..7
தீராத துன்பம் தானாக விலகும்
மாறாது விநாயகன் அருள்..8
காரணம் அறியாது கவலைகள் தொலைக்க
கரணமிடு விநாயகன் அருள்....9
இன்றே வருவான் விடைகள் தருவான்
நன்றே விநாயகன் அருள்...10
கலியுக குறள் அதிகாரம் மாப்பிள்ளை
இலையில் இட்டவுடன் நிரப்ப மறந்து
சமையல் செய்வதும் பணி..1
சாத்திரம் கற்றல் மறந்து இப்போது
பாத்திரம் விளக்கி பயில்...2
ஆத்திரம் கொண்டு அடக்கியது சென்று
தோத்திரம் மனையெனத் துதி.3
துணைவியை விரட்டிய பாட்டன் இன்று
மனைவியை சேவித்த பேரன்...4
வேலைக்கு சென்றிடு திரும்பிட அந்தியில்
வேளைக்கு முந்தியே சமை....5
சுழன்றிட வேலைக்கு ஓய்வில்லை கடிகாரம்
கழன்றிட முள்ளுக்கு முக்தி.....6
அம்மியை மிதிக்க அழைத்த நிலைபோய்
தும்பியை பிடித்தது ஆசை.....7
அம்பது சுற்றென முறுக்கு கேட்டவரே
தெம்பது இல்லாது தேடு..8
பெண்வீடு பொன்னென கறந்த பாவமே
கண்ணோடு காணாத வரன்..9
திருமணம் என்பது அன்பறம் வணிகமாய்
மறுமணம் ஆக்கியது யார்..10
கலியுக குறள் அதிகாரம் தேர்தல்
அறுபதுக்கும் ஆறுக்கும் வேறுபாடு அறியாதவர்
கூறுவதும் சரியாகுமோ சொல்..1
எல்லைகள் தாண்டி இலவசம் யாவும்பெற
உள்ளுரில் ஆண்டிகள் கதை..2
இலஞ்சம் கொடுத்தார் இலஞ்சம் பெற்றார்
இருவரின் கைகளும் பிழை 3
ஓசியாய் ஆசையாய் வாங்கிய ஓட்டெலாம்
பாசியாய் சாக்கடை வரும்...4
எடுத்த புண்ணியம் கெடுத்து வீணடிக்க
அடுத்த பிறவியும் புழுவே..5
பொய்யும் புரட்டும் பெய்யும் வரைக்கும்
உய்யும் உல்லாச பணி...6
இளித்தவர் ஒருபுறம் இழந்தவர் ஒருபுறம்
இளைத்தவர் படித்தவர் தான்...7
தேற்றுதல் இல்லை தேடுதல் இல்லை
ஆறுதல் ஆற்றில் மணல்..8
சின்னம் காட்டியே பின்னம் ஆக்கினர்
இன்னும் என்னென்ன வரும்....9
மக்களே மக்களை ஏய்க்கும் மைதானம்
எக்காலம் இன்பம் பெறும்..10
அன்னையர் தினம் 2023 (சத்தியமணி)
அம்மா எனும் மந்திரம்
ஆனந்தசுகம் தந்திடும்
சும்மா மனம் தன்னிலே
அருள் ஆற்றலை தந்திடும் ()
கருப்பை முதற்கொண்டு கல்லறை வரைவந்து
நிழலாக துணைத் தந்திடும்
இருப்பை நிறையென்று
வருத்தங்களைக் கலைந்து
ஆறுதல் பலம் தந்திடும்
பிறக்கின்ற நியதிக்கும்
குறிக்கோளை நியமிக்கும்
இறக்கின்ற வரை நீடிக்கும்
இயலாத போதும் நமை
எழுந்தாட வைத்து விடும்
நலமான யாவும் தரும்
()
அருகினிலே அமர்ந்து
அவளிடம் அளிக்காத
பதவிக்கும் பலனில்லையே
முதுமையில் அவள்வாடும்
வலிக்கும் மருந்திடா
கைகளில் பயனில்லையே
அழைக்கின்ற போதவளை
வதைக்கின்ற சொல்லுதிர்த்த
பாவத்தின் முடிவில்லையே
உள்ளத்தை உதைத்துவிட்டு
செல்வத்தில் செல்வாக்கில்
வாழ்வதில் பொருளில்லையே ()
