Wednesday, 7 September 2022

 பாரதமெங்கும் பாரதி

(சத்தியமணி sathiyamani@gmail.com)

http://sathiyamani.blogspot.com/  ]

கவிதை அவ்வை தமிழ் சங்கம் 04-09-22 ஞாயிறு 6.00 மணி

 

காப்பு

 

வெங்களிறே  வேலவனே வெள்ளி யம்பலனே  

செங்கமல    நாயகியே சீரங்கத்  திருமாலே

மங்களம்     யாவுமுடை மதுரைக்கு மீனரசி

தங்குதடை   யிலாத      தமிழெனக்கு தா

 

வாழ்த்து

அவ்வை வளர்த்த தமிழ்

ஆழ்வார்கள் இசைத்த தமிழ்

இமய குறுமுனியும்

ஈசனும் வகுத்த தமிழ்

சொக்கன் கொஞ்சும் தமிழ் 

மீனாளும் கெஞ்சும் தமிழ்

வந்தனம் வேழனுக்கும்  

நர்த்தனம் செய்த தமிழ்

மலைச்சாமி சுவாமிநாதன்

மயில் அமர்ந்து ஆடும் தமிழ்

 

சங்கப் புலவர் எல்லாம்

சரசம் களித்த தமிழ்

தங்கும் கவிகள் நுனி

நாவினில் பொழிந்த தமிழ்

நெல்லி நெய்த தமிழ்

கிருஷ்ணாவில் இனிக்கும் தமிழ்

செல்வமூர்த்தி எனும்

செல்வத்தை சேர்த்த தமிழ்

வாசனின் வாசத்துடன்

வாசம் செய்த தமிழ்

வளவனின் நேசத்திலே

வலம்வந்த வசியத் தமிழ்

பரதம் பயின்ற தமிழ்

பைங் குழலோதும் தமிழ்

பாரதம் ரதமேறி

பாரதி  ஆனத் தமிழ் 

பாரதிய வித்தை பவன

மேடையில் அமர்ந்த தமிழ்

சுப்பையா முன்னுரைக்க  கலைமாமணி

முத்தையா பேச்சு உரைக்க

முத்தாரம் குவித்த தமிழ்

முக கவசம் மறந்த தமிழ் 

அவையோரை அகம் மகிழ

செவியோரம் நுழையும் தமிழ்

அலை அலையாய் கர ஒலியில் அவை எழுந்து முழங்கும் தமிழ்

நிலை மறந்து வாய் திறந்து ஜெய கோஷம் எழுப்பும் தமிழ்

போதும் என்ற போதும் அடங்காத துள்ளும் தமிழ்

வேணுமினு இன்பம் கொஞ்ச வேடிக்கை காட்டும் தமிழ்

நொய்டா பிறந்து தவழ்ந்து

யமுனைக் கடந்து வந்து உவந்து எதிர் உட்கார்ந்த தமிழ்

இன்று பாரதியை பாட வந்திருக்கிறது

 

சிறியார் பெரியார் வறியார் எளியார்

புரியார் தெரியார் அறியார் வலியார்

மதியார் மிதியார் அரியார் அரனார்

என எத்தெத்னை யார் கேட்டாலும்

பிள்ளையார் என்றால் பிள்ளையார் தானே

 பாரதி யார் என்றால் பாரதி தானே

 

 கண்களில் கதிர் எடுத்து கவிதையில் கனல் எடுத்து 

கைகளில் கோலெடுத்து தோள்களில் வாளெடுத்து 

வரிகளில் படையெடுத்து வார்த்தையில் அணுபிளந்து

சுதந்திர போர் புரிந்த சுப்பிரமணி அவன்.

விடுதலை  வேள்வியினில்  ஆகுதி ஆனவன்

விடாது தலையிருக்கும் முண்டாசு ஆடவன்

நூற்றாண்டு கண்டவனை நொடி பத்தில் பாராட்ட 

பாடும் திறமை இல்லை  பாராட்டும் திறனும் இல்லை

 பாக்கும் வெற்றிலையும் பளிங்கு சுண்ணாம்பும்  

போட்ட தாம்பூல பை போல ஒன்றிரண்டு  

அவன் பற்றி  சேர்க்க நான்  தந்தேன்  

செவிக்கு இனிதாய் சேர்த்திடுவீர் இனிதே

 

காரதிர வந்தால் கனமழை என்றுரைப்பார்

தேரதிர வந்தால் திருவிழா என்றுரைப்பார்

ஊரதிர வந்தால் உற்சவம் என்றுரைப்பார்

பாரதிர வந்தால் பாரதி தானே

 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லை ஒற்றுமை நீங்கில் தாழ்வு

நன்றென சிந்தை சொன்னான் பாரதம் பெற்றதை தந்தான்

இன்றதை பிரிவுகள் சொல்லி பிணக்குகள் செய்யலாமோ

கொன்றதை பேயினைப்போல் கணக்குகள் போடலாமா

ஒரு நாடு ஒரு உரிமை ஒரு பேச்சு ஒரு மூச்சு

ஒரு வீடு ஒரு மனது ஒற்றுமையாய் வாழலாமே

 

ஓடி விளையாடு ஓய்தல் கூடாது

கூடி விளையாடு வைதல் கூடாது

தேடி கவி படித்த பாப்பா பாட்டுகளில்

எத்தனை எளிமை தமிழ் எத்தனை அறிவுரைகள்

எத்தனை கவிநயம் எத்தனை ஆழ்பொருட்கள்

அத்தனையும் மறந்து போய் ஆங்கிலம் சிதைத்த தமிழ்

பேசத் தெரியாப்

பித்தரையும் புகழ்ந்து மேடை அசிங்கம் பட்ட தமிழ்

கற்றதெல்லாம் கலக மாகி பெற்றதெல்லாம் பிழைகள் ஆகி

புற்றில் கை விட்டதுபோல் புலம்பல் ஆகி புலம்பெயரும் இன்றோ?

அறம் கூறும் சபைகள் எல்லாம் அடிபணிதல் ஆகும் எனில்

மறை கூறும் நீதி எல்லாம் மந்தை என மாறும் அன்றோ?

உறவுகள் உரிமைக்காக உடைமைகள் ஒருவருக்காக

உணர்வுகள் நடிப்புக்காக உள்ளமிலை துடிப்புக்காக

திறவுகோல் இன்றி பாசப் பிணைப்புகள் பிரிதல் ஏனோ?

களவுகள் கடமை என்று இணைப்புகள் விரிதல் ஏனோ?

 

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என வெள்ளையனை சொன்னதே இன்று

வெட்கமில்லை மானமில்லை மக்கள் ஏய்க்கும் போதிலே

உள்ளமில்லை ஊனமில்லை ஊழல் செய்யும் போதிலே

என்று மாறவிட்டது ஏமாறவிட்டது நம் குற்றமே

இனியும் பொறுத்தல் சரியோ ?

 

பெண்டிர் சுதந்திரம் அவனது பலித்த கனவு

புதுமைப் பெண்கள் நிலை புரட்சி ஆகியது

மங்கையரின் மகத்துவம் மாநிலங்கள் பெருக்கியது

சமையலறை விட்டு திறமை ஆராய்ச்சி நிலைக்கு உயர்ந்தது

சுமைகள் குடும்பம் இருந்தும் அனைத்திலும் முத்திரை பதித்தது

இதையெல்லாம் கேட்டாயா பாரதி?

முண்டாசை தட்டிடுவீர் மீசை முறுக்கிடுவீர்

இருந்தும்

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிந்தது போல்

சொல்ல வாய் கூசுதய்யா சுதந்திரம் எனக்கூறி

கையிளம் பெண்களை கற்பழித்து சீரழிப்பார்

பொய்யெல்லாம் புனைந்து செய்திகள் பிரசுரிப்பார்

பள்ளிகள் போதையுடன் படிப்புகள் பாடையுடன்

கல்விகள் எல்லாமே கள்வரின் கயமையுடன்

கலப்படம் ஒரு பக்கம் களவுகள் ஒருபக்கம்

திரைப்படம் ஒரு பக்கம் இலவசம் ஒரு பக்கம்

உழைக்காமல் முன்னேற வசதிகள் ஒரு பக்கம்

மையலில் வெள்ளையன் நாட்டுக்கு அடிமைகளாய்

மதியை அடகு வைப்பார் மனசாட்சி விலைக்கு விற்பார்

பை நிறைய சேகரிப்பார் தாய் வயிறு காய்ந்துவிடும்

தந்தைக்கே இந்த கதி தாய் மண்ணுக்கு என்ன விதியோ ?

"பந்தத்தை நீக்கிவிடு அல்லால் உயிர் பாரத்தைப் போக்கிவிடு

சொந்தத்தை பெரிதாக்கு சொத்தை சிரிதாக்கு

தந்தத்தை போல் உறவை சாலப் பெரிதாக்கு

சிந்தை தெளிவாக்கு அல்லாவிடில் செத்த உடலாக்கு"

என்று சொன்னவரே எங்களை காத்தருளும்

 

தேசிய ஒருமைப்பாட்டின் கண்ணோட்டத்தில் இன்று

வெள்ளி பனிமலையில் மீது உலாவுகிறோம்

ஆழக்கடல் எங்கும் கப்பல் விடுகிறோம்

நிலவுக்கும் சென்று நீந்தி வர கற்றுக் கொண்டோம்

உலகத்தில் நல்ல பெயர் பெற்று கொண்டோம்

ஆயுதம் ஏற்றுமதி செய்கிறோம்

மென்பொருள் ஏற்றும் மதி செய்கிறோம்

  கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் இன்று

காவிரி வெற்றிலையுடன் காதலிக்கிறது

காஞ்சியின் பட்டு காஷ்மீரப் பெண்களின் கட்டு

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைக்க

சேதுவை மேடுறுத்த முயல்கிறது

காவிரியும் கோதாவரியும் நீர் வளம் பெருக்க

செயல்திட்டம் முனைகிறது

இன்னும் இலக்கை அடையும் வரையினில்

ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

தேற்றங்கள் செய்வோம் அதில் ஏற்றங்கள் செய்வோம்

நாற்றாங்கால் தலைமுறைக்கு நல்லதோர் உரம் செய்வோம்

ஆனால்

பள்ளி தளம் அனைத்தும் வணிகம் ஆக்கவிடோம்

பாரத தேசப்பண் பாட்டையே மறக்கவிடோம்

பாதகம் செய்பவரை பயந்து விட மாட்டோம்

சாதகம் ஆக்கி யவரை திருந்திட வழி செய்குவோம்

நதிகள் இணையும் வயல்கள் உயரும்

விதிகள் மதிக்கும் தர்மம் தழைக்கும்

வீதிகள் பிழைக்கும் வாழ்வுகள் சிறக்கும்

நீதியறதுறைக்கும் ஓய்வு கிடைக்கும்

பாரதியே உன் வரிகளாம்

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா

அமிழ்தில் இனியதடி பாப்பா நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் அதை தினமும் புகழ்ந்திட டி பாப்பா

வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்த திந்த நாடு

சேதமில்லாத இந்துஸ்தானம் இதை தெய்வம் என கும்பிடடி பாப்பா

 

எனக்கூறி

தமிழே வாழிய வாழியவே

தர்மம் வாழிய வாழியவே

பாரதி வாழிய வாழியவே

பாரதம் வாழிய வாழியவே

வணங்குகிறேன் . வந்தே மாதரம் .

 

 

 

 

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்