தாய்மொழி தவிர்ப்பவன்
நாவினில் உணர்விலை
தாய்மொழி வெறுப்பவன்
பிறப்பதும் பயனில்லை
தாய்மொழி படித்திட
தடங்கிடில் உயிரில்லை
தாய்மொழி எழுதிட
மறந்தவன் மடப்பிள்ளை
தாய்மொழி நமக்கு
தமிழ்மொழி ஆகிடும்
அதுபோல் பிறருக்கும்
அவரன்னை கூறிடும்
மொழிகளை வெறுப்பதும்
இகழ்வதும் ஏளனம்
புரிவதும் மடத்தனம்
அறிவதோ நலம்தரும்
ஒவ்வொரு மொழியிலும்
ஆக்கம் பெருக்குண்டு
ஒவ்வொரு மொழியிலும்
ஆற்றல் ஒலியுண்டு
ஒவ்வொரு மொழியிலும்
வர்கங்கள் பலவுண்டு
அவ்வறு மொழியிலும்
ஓசைவளமுண்டு
மொழிகள் அனைத்திலும்
காப்பியம் காவியம்
இலக்கணம் இலக்கியம்
கவிதைகள் இருப்பிடம்
படைத்தவர் பலருண்டு
தொகுத்தவர் பலருண்டு
பலமொழி கற்றதை
இணைத்தவர் பலருண்டு
மொழிபெயர்த்தவராயிரம்
திறமைகள் திறன்கொண்டு
நம்மிடம் மதுரையம்பதியாயின்
வடக்கில் அவரிடம் காச்மீரம்
நம்மிடம் தாமிரவருணியாயின்
உத்திரம் தன்னில் கங்கையல்லோ
கம்பன் நமக்கு கவிக்கோனாயின்
காளிதாசன் வடமொழிக்காம்
ஆங்கில அரபினில் உருசியிலும்
எத்தனைப் படைப்புகள் அறிவதற்கு
அரசியல் வஞ்சக காரருக்காய்
கற்க மறுப்பின் வீழ்வுனக்கு
நம்மனஉள உணர்வுகளை
உலகம் அறிந்திட செய்யும்மொழி
நம்மின ஆன்றோர் பண்பாடை
வரும்தலைமுறைக்கு செலுத்துமொழி
நம்மொழி தம்மை செம்மையுற
கற்காவிட்டால் நமக்கழிவு
தம்மொழி கற்றதன் பின்னாலும்
பிறமொழி பயில்வது நமக்குயர்வு
நாட்டிடை பல்மொழி இருந்தாலும்
நமக்கென பொதுமொழி நலம்பயக்க
ஆட்சியில் இருப்பவர் சொல்வதெலாம்
நாமேயறிவது வளங்கொடுக்க
மருத்துவர் கலப்பை எடுப்பதுபோல்
நடத்துனர் ஓட்டுனர் ஆவதுபோல்
அடுத்தவரிங்கே மொழிபெயர்த்தால்
அதிலும் குழப்பங்கள் தான் விளையும்
எல்லாம் தீவினைக் கூட்டிவிடும்
எதிலும் பிரிவினை ஊட்டிவிடும்
அறிந்த மொழியில் இருந்தபின்னும்
செறிந்த தமிழக நிலையுணர்வீர்
தெரிந்த பின்னும் திருந்திடவே
புரிந்து மொழியும் வழியறிவீர்
புரதம் நிறைந்த கூழுண்டால்
உடலும் நலமும் ஒன்றிவரும்
விரதமிடுத்து இருந்துவிட்டால்
எத்தனைகாலம் உயிர்பிழைக்கும்
இந்திய மொழிகளை கற்றிடுவோம்
பாரதம் ஒன்றெனப் பகர்ந்திடுவோம்
மொழியும் மொழியும் புதுவழியும்
மொழிகள் இணையும் புதுவாழ்வும்
வாழ்த்துகள் உங்களின் கவி சத்தியமணி

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்