தேரதிர வந்தால்
தெய்வமே வலம்வரும்
காரதிர வந்தால்
கனமழை நிரந்தரம்
பாரதிர வந்ததால்
பார்ப்பனன் வேள்விதீ
வீரதிர விடுத்ததடா
தமிழுக்கும் பாரதிநீ
மொழிகளை மதித்தாய்
காழ்ப்புடன் வெறுக்கவில்லை
நதிகளை இணைத்தாய்
அரசியல் அடைக்கவில்லை
மாதரைப் புகழ்ந்தாய்
காமத்தில் இகழவில்லை
மதங்களைப் போற்றினாய்
மக்களை பிரிக்கவில்லை
சாதிகள் இல்லையென்றாய்
சட்டத்தில் பிரிக்கவில்லை
மதங்கள் நன்றென்றாய்
கட்சிகள் வளர்க்கவில்லை
கோயில்கள் பள்ளியென்றாய்
வணிகமே நடத்தவில்லை
மங்கையர் சுதந்திரமே
குத்தாட்டம் சொல்லவில்லை
சுதந்திரம் பயிற்றுவைத்தாய்
சூராடும் படியில்லை
தேசத்தை வளரச்சொன்னாய்
தேய்த்திட சொல்லவில்லை
அச்சத்தை அழிக்கசொன்னாய்
அதில்வில்லத் தனமில்லை
உயர்வுக்கு உழைக்கசொன்னாய்
ஊழலைப் பற்றியில்லை
ஏற்றம் பெற சொன்னாய்
ஏமாற்றும் செயலுக்கில்லை
வசதிகள் ஈட்டசொன்னாய்
வாரிசுக்கு சிபாரிசில்லை
கப்பல் விடசொன்னாய்
கையூடல் கலக்குதப்பா
தெய்வம் துணையென்றாய்
தெருகோயில் சிதையுதுபார்
மருத்துவ காக்கவென்றாய்
மலைவிழுங்கி பாம்புகளே
திருந்துவோர் நிலையெலாம்
திருட்டில் நிறையுதப்பா
அறமெலாம் வளரசொன்னீர்
அடிதடி பெருக்கெடுக்க
கன்னியர் கற்பினுக்கோ
நிகழ்வதை என்னசொல்ல
ஒன்று பட்டாலுண்டென்றாய்
ஓநாய்கள் அணிவகுக்கும்
நரிகளும் பணம்வாங்கி
பிரிவினை தனைவிதைக்கும்
ஓட்டுக்கு ஓசிகளும்
வாக்குரிமை பேசிகளும்
நாட்டுக்கு மக்களுக்கு
வேட்டுவைக்கும் வேடிக்கையே
வளர்ச்சி ஒருபுறமும்
கிளர்ச்சி ஒருபுறமும்
தெளிவு ஒருபுறமும்
குழப்ப ஒருபுறமும்
உண்மை ஒருபுறமும்
பொய்மை மறுபுறமும்
மெச்சல் ஒருபுறமும்
வஞ்சம் மறுபுறமும்
சுதந்திரத்தை நஞ்சாக்கும்
சுயநல துரோகிகளை
அவர்தம்மை பிளந்து
சிம்மமாய் வருவாயே
தமிழுக்கும் பாரதிநீ
தரணிக்கும் பாரதமே !!!

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்