Wednesday, 28 September 2022

கலைவாணி பதிகம்



கலைவாணி பதிகம்

(சத்தியமணி)

ஆசிரியவிருத்தம்



இதந்தரு மனதில் வந்தாய் இடர்தனை கலைந்து விட்டாய்

சுதந்திர இசையும் தந்தாய்  சுரங்களை வகைகள் சொன்னாய்

மதந்தரு புகழும்  எந்தாய் மகிழவும் வளரும்  உன்றன்

பதந்தரு மகிமை என்னே பாரதி பரவும் நின்றே......1


ஆனந்த வடிவழகே அகிலாண்ட தேவி அற்புதமே தவவடிவே பேரறிவே மேவி

வானத்து வெண்மதியே வைகறையே தூவி வேய்ந்திட்ட தாரகையர் பதித்த கூரை

மோனத்து பொருளாகி சிந்தைக்குள் ஊறி அமுதாகும் தேவதரு மரமேநல் பாட

கானத்து கருகுயிலே பச்சைக்கிளி பிள்ளை என்னிருதோள் அமர்ந்தருள முத்தமிழாய்  ஆள.....2





Tuesday, 13 September 2022

யார் பகைவன்

கீதம்  


நீயே உனக்கு பகைவன் ஆனபின்

வாழ்வும்  உனக்கு  பெரும் சுமையே

நீயே உனக்கு துரோகி யானபின்

உறவும் உனக்கு கொடும் பகையே

தாய்க்கு  பார மாகி விட்டாய்

மண்ணுக்கு சுமையாய்  மாறி விட்டாய்     ( )

காட்சி பலமாற்றி கட்சி பலமாறி 

ஆட்சி செய்வதொரு  பிழைப்போ

 பொய்

சாட்சி பலகூறி  நீதிதனை மாற்றி 

விழுங்கி கொள்ளு வதும் உழைப்போ

வாக்கு பலகூறி ஏய்க்கும் திறன்னாற்றி

வறியர் வாழ்வை கொல்லல் அறிவோ

நோக்க மறைத்தபடி ஆக்க பணிகளென

அழிக்க நினைப்  பதுவும் அறனோ  (  )


பாவம் பலசெய்த பின்னும் பலகோடி

நியாய மென்ற தனை சொல்வாய்

தாவும் மனதினில் பேயும் குடிபெயர

ஈரக் கருணை  களைத் தவிர்த்தாய்

சாவும் மனிதர்களின் துக்க துயரங்களை

காட்டிநி வாரண ங்கள் சேர்ப்பாய்

சூதும் வாதும் பலதீயப் பழக்கங்களை

பள்ளி பிராயத் தினில் பயிற்பாய்  ( )

குற்றம் பலபெருக குற்றவாளி களின்

கொற்ற மெனக் கூறி புகழ்வாய்

சுற்றம் புடைசூழ சுற்றதார் களுடன்

சுற்று லாக்கள் பல புரிவாய்

கற்றவர் களின் கருத்தை வெறுத்தபடி

முற்று   மெதிர்  திட்டம் வரைவாய்

சற்றும் நினையாது நாக்கில் வந்தபடி

பேசிபொய்யில் மொழி பெயர்ப்பாய்

ஏற்ற  தாழ்வுகள் இல்லை யெனச்சொல்லி

மேடை யெங்கும் பிரித்து உரைப்பாய்

ஆற்ற ஆக்கமெனும் வழியை விட்டுபிற

மார்க்க எதிரிகளிடம்  சரண டைந்தாய்

  ( )









Sunday, 11 September 2022

கடமையின் பாதை

 கடமையின் பாதை

(சத்தியமணி)


கடமை என் பாதை

கடமையின் பாதை

கடமை உன்பாதை

கடமையுன் பாதை

கண்திறந்து பார்

மனந்திறந்து எழுதிகொள்


களைப்பிலா பயணத்தில்

கற்முற்கள் கால்துளைத்து

புண்ணாக்கி விட்டபோதும்

புறையோடி  சீழ்இரத்தம்

தடையாக்க வந்தபோதும்

தள்ளாட்டம் இன்றியதில்

குறிக்கோள்கள் வைத்து

கூரம்பாய் நீதொடரு


ஏளனம் செய்வார்கள்

எள்ளிநகை யாட்டமுடன்

கைகொட்டி சிரிப்பார்கள்

கழுதையென இகழ்தலுமே

மண்மீது பிறந்தவர்க்கு

மண்ணாகும் வரையில்நீ

உண்மைக்கு தோள்கொடு

உலகுக்கு  தர்மமொடு


பெற்ற தாயார்க்கு

பிள்ளைநீ காப்பாற்று 

கற்ற மதியெலாம்

அடகாக்கு அவள்காலில்

பதவிபணம்புகழில்

பகட்டில் நீ வாழ்ந்தாலும்

உற்ற தாய்விட்டு

ஓரங்கட்டி விட்டாயா?

குற்றம் உனக்குடைய

கோடி    பிறவிகளில்

முட்டையாய் மண்புழுவாய்

மீண்டும் வதைபடுவாய்

வற்றிய குளத்திலே

துயருரறும் மீனாவாய்


சுற்றதார் முன்னால்

பெற்றதாய் மிதித்து

வீதியில் இட்டாலோ

விதியென சுட்டாலோ

குற்றம் உனைக்கொல்லும்

குறையாது குறையாகும்

மற்றவை நான்சொல்ல

மடையருக்கு புரியாது

கொற்றவர்க்கும் இதுவேதான்

கொடியவர்க்கும் இதுவேதான்


ஈரைந்து திங்களிலே

உனைசுமந்த உத்தமியை

ஆறைந்து வயதினிலே

அனாதை ஆக்கியதால்

உடமைகள் என்று சொல்லி

உன்னோடு பிணிவிழும்

உரிமைகள் என்று கூறி

உன்னோடு பேய்வாழும்


தாயும் தாய்மண்ணும்

வேறில்லை வேறில்லை

ஓயும் வரைக்கும் அவை

உனக்கான பெயரழைக்க

நாயும் நரியினமும்

தம்தாயை விட்டதில்லை

ஓயும் வரையில்மனப்

பாசம் திரிந்ததில்லை


சேயும் நலங்காண 

விரும்பும் தாய்நாட்டை

ஏய்த்து பிழைப்போரின்

வம்சம் வளர்வதில்லை

ஏமாற்றி ஆள்வோரின்

பரம்பரை துளிர்வதில்லை

இறைவனுக் குரிதான நிலம்பொருள்அணிகளதை

தெரியாமல் எடுத்தாலும்

பரிசாக்கி கொண்டாலும்

களவாடி ஆகிவிட்டாய்

களங்கம் ஆனதுதான்

பொதுசொத்து அபகரித்த

பாவங்கள் எரித்துவிடும்

தீவினைகள் தொடர்பிறவி

யாவிலும் துயருந்தரும்

மடியில் தீவளர்த்தால்

மரிவது  யார்கடனோ..

பாரதி யார் ?

செந்தூர நாமமிட்ட 

நெற்றியுடையோன் பாரதி

வெற்றிடம் வைப்பதிலை

சந்தங்கள் தாளமிட

சங்கதிகள் தந்தோன்

தன்மானம் விட்டதிலை

வாழ்கையில் வறுமையில்

வாடியவன் பாரதி

உண்டியல் குலுக்கவில்லை

செந்தமிழ் தேனென்று

சொன்னாலும் இந்துஸ்தான்

என்பதை மறுக்கவில்லை

பாரதபூமி  பழம்பெருநாடு

நீரதன் புதல்வரென்றான்

நிச்சயம் பிரிக்கவில்லை

சிந்தைக்குள் சுதந்திர

வேட்கை வெடித்தான்

சுயநலம் சேர்க்கவில்லை

எந்தையும் தாயும் 

வளர்த்த மண்ணென்றான்

அரியணை பதுங்கவில்லை

முண்டாசு கட்டியும்

பத்திரிக்கை பதிப்பித்தான்

பொய்களை பரப்பவில்லை

சாதிகள் இல்லையென 

சொல்லியே வாழ்ந்தவன்

சான்றிதழ்  செப்பவில்லை

எல்லோரும் ஓரினம்

என்றிவன் பார்ப்பனன்

என்பதால்  மதிப்புஇல்லை

போதனை தந்தவர்க்கு

புகலிட  மானவன் 

வேதனை தந்தில்லை 

எம்மதக் கடவுளும்

வேண்டுக துணையென்ற

போதிலும்  பழிக்கவில்லை


நன்றதை சொல்வதும்

நயமுற சொல்வதும்

இவனைப் போல் பாரிலிங்கே

இருக்கிற கவிஞரின்

பெயர்விட்டு பாராட்டும்

தினமலர் பிரதியுமிங்கே



  

தமிழுக்கும் பாரதிநீ 2019

தேரதிர வந்தால் 

தெய்வமே வலம்வரும்

காரதிர வந்தால்

கனமழை நிரந்தரம்

பாரதிர வந்ததால்

பார்ப்பனன் வேள்விதீ

வீரதிர விடுத்ததடா

தமிழுக்கும் பாரதிநீ


மொழிகளை மதித்தாய் 

காழ்ப்புடன் வெறுக்கவில்லை 

நதிகளை இணைத்தாய்

அரசியல் அடைக்கவில்லை 

மாதரைப் புகழ்ந்தாய்

காமத்தில் இகழவில்லை

மதங்களைப் போற்றினாய்

 மக்களை பிரிக்கவில்லை


சாதிகள் இல்லையென்றாய்

சட்டத்தில் பிரிக்கவில்லை

மதங்கள் நன்றென்றாய்

கட்சிகள்  வளர்க்கவில்லை

கோயில்கள் பள்ளியென்றாய்

வணிகமே  நடத்தவில்லை

மங்கையர்  சுதந்திரமே

குத்தாட்டம் சொல்லவில்லை


சுதந்திரம் பயிற்றுவைத்தாய்

சூராடும்  படியில்லை

தேசத்தை வளரச்சொன்னாய்

தேய்த்திட சொல்லவில்லை

அச்சத்தை அழிக்கசொன்னாய்

அதில்வில்லத் தனமில்லை

உயர்வுக்கு உழைக்கசொன்னாய்

ஊழலைப்  பற்றியில்லை


ஏற்றம் பெற சொன்னாய்

ஏமாற்றும் செயலுக்கில்லை

வசதிகள் ஈட்டசொன்னாய்

வாரிசுக்கு சிபாரிசில்லை

கப்பல் விடசொன்னாய்

கையூடல் கலக்குதப்பா

தெய்வம் துணையென்றாய்

தெருகோயில் சிதையுதுபார்


மருத்துவ காக்கவென்றாய்

மலைவிழுங்கி பாம்புகளே

திருந்துவோர் நிலையெலாம்

திருட்டில் நிறையுதப்பா

அறமெலாம் வளரசொன்னீர்

அடிதடி பெருக்கெடுக்க

கன்னியர் கற்பினுக்கோ

நிகழ்வதை  என்னசொல்ல


ஒன்று பட்டாலுண்டென்றாய்

ஓநாய்கள் அணிவகுக்கும்

நரிகளும் பணம்வாங்கி

பிரிவினை தனைவிதைக்கும்

ஓட்டுக்கு  ஓசிகளும்

வாக்குரிமை பேசிகளும்

நாட்டுக்கு மக்களுக்கு

வேட்டுவைக்கும் வேடிக்கையே


வளர்ச்சி ஒருபுறமும்

கிளர்ச்சி ஒருபுறமும்

தெளிவு ஒருபுறமும்

குழப்ப ஒருபுறமும்

உண்மை ஒருபுறமும்

பொய்மை மறுபுறமும்

மெச்சல்  ஒருபுறமும்

வஞ்சம் மறுபுறமும்

சுதந்திரத்தை  நஞ்சாக்கும்

சுயநல துரோகிகளை

அவர்தம்மை பிளந்து

சிம்மமாய் வருவாயே

தமிழுக்கும் பாரதிநீ

தரணிக்கும்  பாரதமே !!!









முன்னோர் வழிபடு

 முன்னோர் நினைத்து எள்நீர் கொடுத்து

தன்கடன் தீர்த்து கொள்...1

முன்னோரை துதித்த சிரத்தையில் எள்நீரே

பின்னோரை வாழ்த்தி வைக்கும்..2

பிறவி பெருங்கடன் பெற்றோரை காத்தல்

மற்றவை மடிக்கு சுமை...3

பூமிக்கு பாரமாய் தலைக்கு சுமையாய்

இருப்பதை குறைக்க முனை...4

பிறவிகள் யாவிலுமே தொடரும் பிழைகளையும்

கரைக்கும் எள்நீர் அறி....5

தொடரும் பாவமெனும்

மிச்சங்கள் அழித்தால்

தெரியும் முக்தி வழி..6

பெற்றோரை நினைத்து பெருமாளை அழைத்து

தொற்றிய பாவம் தொலை...7

அட்சதை ஏந்தியே 

வருகின்ற மகாளயம்

பட்சத்தில் திருப்தி கொடு.....8

தலைமுறை மூன்றும்

நமைக்காண வரும்போது

நினைவாலே போற்றி படி...9

வாழ்ந்த நினைவுகள்

வாழ்த்த வரும்போது

வாழ்வின் பயனைப் பெறு..........10

Saturday, 10 September 2022

மொழியும் வழியும்

தாய்மொழி தவிர்ப்பவன்

நாவினில் உணர்விலை

தாய்மொழி வெறுப்பவன்

பிறப்பதும் பயனில்லை

தாய்மொழி படித்திட

தடங்கிடில் உயிரில்லை

தாய்மொழி எழுதிட

மறந்தவன் மடப்பிள்ளை


தாய்மொழி நமக்கு

தமிழ்மொழி ஆகிடும்

அதுபோல் பிறருக்கும்

அவரன்னை கூறிடும்

மொழிகளை வெறுப்பதும்

இகழ்வதும்  ஏளனம்

புரிவதும் மடத்தனம்

அறிவதோ  நலம்தரும்


ஒவ்வொரு மொழியிலும்

ஆக்கம் பெருக்குண்டு

ஒவ்வொரு மொழியிலும்

ஆற்றல் ஒலியுண்டு

ஒவ்வொரு மொழியிலும் 

வர்கங்கள் பலவுண்டு

அவ்வறு மொழியிலும்

ஓசைவளமுண்டு


மொழிகள் அனைத்திலும்

காப்பியம் காவியம்

இலக்கணம் இலக்கியம்

கவிதைகள் இருப்பிடம்

படைத்தவர் பலருண்டு

தொகுத்தவர் பலருண்டு

பலமொழி கற்றதை

இணைத்தவர் பலருண்டு

மொழிபெயர்த்தவராயிரம்

திறமைகள் திறன்கொண்டு


நம்மிடம்  மதுரையம்பதியாயின்

வடக்கில் அவரிடம் காச்மீரம்

நம்மிடம் தாமிரவருணியாயின்

உத்திரம் தன்னில் கங்கையல்லோ

கம்பன் நமக்கு கவிக்கோனாயின்

காளிதாசன் வடமொழிக்காம்

ஆங்கில அரபினில் உருசியிலும்

எத்தனைப் படைப்புகள் அறிவதற்கு

அரசியல் வஞ்சக காரருக்காய்

கற்க மறுப்பின் வீழ்வுனக்கு


நம்மனஉள  உணர்வுகளை

உலகம் அறிந்திட செய்யும்மொழி

நம்மின ஆன்றோர் பண்பாடை

வரும்தலைமுறைக்கு செலுத்துமொழி

நம்மொழி தம்மை செம்மையுற

கற்காவிட்டால் நமக்கழிவு

தம்மொழி கற்றதன் பின்னாலும்

பிறமொழி பயில்வது நமக்குயர்வு


நாட்டிடை பல்மொழி இருந்தாலும்

நமக்கென பொதுமொழி நலம்பயக்க

ஆட்சியில் இருப்பவர் சொல்வதெலாம்

நாமேயறிவது வளங்கொடுக்க

மருத்துவர் கலப்பை எடுப்பதுபோல்

நடத்துனர் ஓட்டுனர் ஆவதுபோல்

அடுத்தவரிங்கே மொழிபெயர்த்தால்

அதிலும் குழப்பங்கள் தான் விளையும்

எல்லாம் தீவினைக் கூட்டிவிடும்

எதிலும் பிரிவினை  ஊட்டிவிடும்


அறிந்த மொழியில் இருந்தபின்னும்

செறிந்த தமிழக நிலையுணர்வீர்

தெரிந்த பின்னும் திருந்திடவே

புரிந்து  மொழியும் வழியறிவீர்

புரதம் நிறைந்த கூழுண்டால்

உடலும் நலமும் ஒன்றிவரும்

விரதமிடுத்து இருந்துவிட்டால்

எத்தனைகாலம் உயிர்பிழைக்கும்

இந்திய மொழிகளை கற்றிடுவோம்

பாரதம் ஒன்றெனப் பகர்ந்திடுவோம்

மொழியும் மொழியும் புதுவழியும்

மொழிகள் இணையும் புதுவாழ்வும்

      வாழ்த்துகள் உங்களின் கவி சத்தியமணி 








திருசிர மலையமர நாயகனே.

 திருசிரமலை நாயகனே

சத்தியமணி 31 08 22


வெற்றி தரும் வேழமுக 

மைந்து மினிதா  கனடி

பற்றி பெறும் பாக்கியஉ 

பாத்தி யமென தாளனுடை

சுற்றி வரும் போதில்

மனதாள துயர் களைந்

தேற்றி தடையோட விடும் 

பாலன் விளையாடி வரும்

நற்றி பொன்னி யலைவீச

திருசிர மலையமர  நாயகனே....1


தாயுமா யானன் சிவம்

தாயுமை சேர்ந்து நலம்

தூயுமன தாளும்  குணம்

வாயுமுட னாசியி னில்

காயமுட பிறக்கும் சுழல்

தேயவுட னாளும் நிலம்

பாயும் பொன்னி யலைவீச

திருசிர மலையமர  நாயகனே....2


உச்சி  மலையா ளுமறை

போற்று தயாபர எழில்

மெச்சி சிவசைவ குழாம்

ஏற்று  பிள்ளை யாரனெவே

கச்சி யம்பல தானுறை

காமாட்சி பெற்ற தனால்

பச்சை பொன்னி யலைவீச

திருசிர மலையமர  நாயகனே.....3


காப்பு  அரையில் அரவுயிடை

கழலடி தண்டை மணிகளுமேசர

தோப்பு கரணம் போட்டதுமே

துள்ளி நம்மில் ஏதுகுறை

மூப்பு பிணியா வுமதை

தீர்க்கு படியாகும் ரசம்

நீர்ப்புக பொன்னி யலைவீச

திருசிர மலையமர  நாயகனே.......4


மாமன் ரங்க நாயகனும்

மருமா  மகிழவே நிலம்

மாமிய வளாடும் குழை

கேட்ட ணிந்தே  தினம்

நாமமி னிதாக நெற்றி

நடுவி னிலிட்ட படி

தாமத தாளமு டன்சுக

தாள் பதித்தா டசிவ

ராகம் பொன்னி யலைவீச

திருசிர மலையமர  நாயகனே.......5


சம்பு சலமாகி லிங்கம்

நந்தி உடனோடு தவம்

நம்பி துதிபாடி களிறு

காத்த ஆனைக் காவினிலே

தும்பி க்கையில் வலம்

தூக்கி யெம்நா விலுரை

எம்பி பொன்னி யலைவீச

திருசிர மலையமர  நாயகனே......6


அண்ட சராசர  பெற்று

ஆளும் அகிலா ண்டரசி

கண்ட சினம் தானழிய

கண்ணெ திரில் பேருருவே

உண்ட கொழுக் கட்டையதை

கவளமென தின்ற வனே

வண்டல் பொன்னி யலைவீச

திருசிர மலையமர  நாயகனே......7


உருகி மனதுதி  கள்பல

எழுதி தனக்கானத்  தமிழ்

பருகி பெரும்வள மையுடை

புலமைத் தரும் கணபதியே

இருகி வரும் வளர்மதியே

ஏற்றமிகு பதவி புகழ்

மருகி  பொன்னி யலைவீச

திருசிர மலையமர  நாயகனே.....8


அரச மரத் தடியிலொரு

அருளாள நதியின் கரை

அரச ரும்முனி அகத்தியனும்

அடிபணிய வைக்கும் கரி

முரசரியும் முகத்தவனே

முக்காலம் அறிந்தவனே

பரிசப் பொன்னி யலைவீச

திருசிர மலையமர  நாயகனே.....9


கருக விடும்  அங்குசமும்

கனிய வரும் பூரணமே

அருக முடன் மாலையவை

அத்தி முகங் கணபதியை

எருக்க மொட்ட விழ்ந்திலே

எட்டிசெலும்  தீவினைகள்

பெருகவர பொன்னி யலைவீச

திருசிர மலையமர  நாயகனே.....10


சுமுகாய்  வேழாய்ப் போற்றி

சுகமு ம்மனத் துணிவே போற்றி

ஒற்றை கொம்பாய் போற்றி

ஓமென ஒலிப்பாய் போற்றி

சிராப் பிள்ளையே போற்றி

சிவஞானக் கொழுந்தே போற்றி

திருசிர மலையப்பா போற்றி 

திருசிற் றம்பலம் போற்றி...11


ஒருநாளும் துவளாது 

உன்பாதற் சலங்கையென

வருநாளும் துதிபாடி

வாயினிக்க இசைக்கூடி

திருநாளும் தரிசனமும்

தின்பண்ட பிராசதமும்

அருள்வாய் உமைபாலா

மணிநாதன் முன்சரணம்


.......இன்னும் வரும்

நாம்ஏ மாறியாச்சு

 ஏ  மாறியாச்சு

(சத்தியமணி 06 09 22) 


தாய் மொழி மறந்து போயாச்சு

தச்சுடச்சு இங்கிலீஸ் மயமாச்சு

மச்சி மாறி ப்ரோயென்றாயாச்சு

பெண் மாறி 

பேபியாய் பேச்சு  ( )


கேஜியில் குழந்தை படும்பாடு

சேர்க்கவோ பெற்றோர்

பணம்போடு

நாடெல்லாம் நர்சரி ஆயாச்சு

சிலேட்டெலாம் லேப்டாப் ஆயாச்சு

பள்ளியெலாம் வணிக வளமாச்சு

கொள்ளைக்கு கூட்டும் உருவாச்சு

  ( )  

வாரிசில் வழிமுறை வந்தாச்சு

சிபாரிசில் வேலை கிடைச்சாச்சு

தேர்விலா பட்டம் தந்தாச்சு

உழைக்காமல் சொத்தும் குவிச்சாச்சு

இல்லையென சாதிகள் பிரிச்சாச்சு

தொல்லையென தர்மம் அழிஞ்சாச்சு  ()


வரலாறு பொய்யாறாய் போச்சு

தகராறு பகுத்தறிவாயாச்சு

பொய்யெலாம் போதி மரமாச்சு

பையெல்லாம் கறுப்பு நிதியாச்சு

ஊழலே உத்தம குணமாச்சு

ஓட்டிலே நாம்ஏ மாறியாச்சு  ()

திருவோணம் 2022

 திருவோணம் 

சத்தியமணி 07 09 22


சிறு பாலன் சிரிப்போடு வருகின்றபோது

அடங்காத இன்பம் வரும் அதைமறைக்க முடியாது

சிறு கரங்கள்  ஓர்குடையும்   நீர்க்குவளை யோடு

இருக்கென்ற அழகுக்கு கொடுத்தும் குறையாது  ( ) 


மறையோதும் சிறுவனென வரும் மாயன் அரியாம்

குறையேதும் இல்லாமல் பலியசுரபதியாம்

தவமியற்றும் வாமனனின் மூன்றடிக்கு தானமென

தன்முடியும் பணிந்தானே

பலியால் திருவோணம் ()


தெருவெங்கும் மலராலே

மணக்கோலம் போட்டு

திருவோணப் பலியவரை

வரவேற்கும் பாட்டு

சரணடைந்தார்க் கென்றும்

அருள்முக்தி நலம்கூடும்

நாராயணா வென்றே

கொண்டாடும் மலைநாடும் ()

மனநிறைவாகும்

 மனநிறைவாகும் மகிழ்வும் அருகிருந்தால்

மானேந்தும் வல்லி உன்றன் தரிசனத்தால் ( )


பிறை நுதலே அம்மா 

பித்தனின் இடபுறமே 

செந்துறை தனையாளும்

சுந்தரியே சிவமே  

 ()


சந்திர சேகரனின் 

சக்தியே சிற்பதமே

மந்திர மறையாவும்

 வழங்கும் பொற்கரமே

தந்திர திறமைதரும் 

 ஸ்ரீராஜமாதங்கி

எம்திறத்தில் இருப்பாய் 

என்றுமே தங்கி (  )

பெற்றோராவது சும்மாவா

 பெற்றோராவது சும்மாவா

(சத்தியமணி 08 09 22)


பெற்றோராவது சும்மாவா

பிள்ளைகளுக்கு தெரியாது

கற்றோராகி உயர்ந்த பின்னாலும் அனுபவமின்றி புரியாது  


கருவை தாங்கிடும் அன்னைகளின்

கருப்பை இயக்கங்கள் மாறுபடும்

பிடித்த உணவுகள் ருசித்ததன்பின் விரைவாய் வாந்தியில் வெளியேற்றும்

சுமையைத் தாங்கிடும் போதினிலே 

மூச்சுமிறைக்கும் வலியிருக்கும்

தூங்கவும் அமரவும் முடியாமல் தாய்மை அவதியும் கொஞ்சமல்ல ()


ஈன்றதன் பின்னால் சிலவருடம்

இரவு தூக்கமிலை நிலையே

நீண்ட அழுகையில் குழந்தையதன்

காரணம றியவும்

கலையிலையே

கொஞ்சிட எடுத்து அணைக்கையிலே மூத்திரமடித்து தான் ரசிக்கும்

கெஞ்சிடும் மழலையை கேட்டாலோ

சிரமங்களெல்லாம் சிரிக்க வைக்கும் ( )  


தந்தையின் தோளினில் யானை என்றும் 

தாயின் தோளினில் மூட்டையென்றும் 

அடுக்கி வைத்த பொருட்களையும்

அநாசியமாய் உடைந்திருக்கும் 

சுவரில் கரியில் கிறுக்கெல்லாம்

ஓவியமென்று ரசித்திருப்பர்

செய்யும் குறும்புகள் நினைவு வைத்து

பெருமைக் கூறிட  புகழ்ந்திடுவர்  ( ) 


குழந்தை வலிகளைப் பொறுக்காமல் 

தெய்வம் படுகிற அவதிகளும்

சேர்த்து வைத்தன கரைந்தாலும் காக்க வைத்திடும் கருணைகளும்

எத்தனை பிறவிகள் எடுத்தாலும் 

கடனை அடைக்க முடியாது

அவர்களின் முதுமை அவதியுற்றால்

எவர்க்கும் முக்தி கிடையாது.    ()


வலியில் துடிக்கும் கால்களையும்

எண்ணைத்தடவிட ஒத்தடமும்

விழியும் செவியும் மங்குகையில்

கையுடன் சேரும் அரவணைப்பும்

எத்தனை டாலர் ஈடேற்றும்

எத்தனை  அன்புடன் உரையாற்றும்

அத்தனை பொழுதை தொலைத்துவிட்டார்

வாழ்வின் பயனை இழந்து விட்டார்   ()

Wednesday, 7 September 2022

 பாரதமெங்கும் பாரதி

(சத்தியமணி sathiyamani@gmail.com)

http://sathiyamani.blogspot.com/  ]

கவிதை அவ்வை தமிழ் சங்கம் 04-09-22 ஞாயிறு 6.00 மணி

 

காப்பு

 

வெங்களிறே  வேலவனே வெள்ளி யம்பலனே  

செங்கமல    நாயகியே சீரங்கத்  திருமாலே

மங்களம்     யாவுமுடை மதுரைக்கு மீனரசி

தங்குதடை   யிலாத      தமிழெனக்கு தா

 

வாழ்த்து

அவ்வை வளர்த்த தமிழ்

ஆழ்வார்கள் இசைத்த தமிழ்

இமய குறுமுனியும்

ஈசனும் வகுத்த தமிழ்

சொக்கன் கொஞ்சும் தமிழ் 

மீனாளும் கெஞ்சும் தமிழ்

வந்தனம் வேழனுக்கும்  

நர்த்தனம் செய்த தமிழ்

மலைச்சாமி சுவாமிநாதன்

மயில் அமர்ந்து ஆடும் தமிழ்

 

சங்கப் புலவர் எல்லாம்

சரசம் களித்த தமிழ்

தங்கும் கவிகள் நுனி

நாவினில் பொழிந்த தமிழ்

நெல்லி நெய்த தமிழ்

கிருஷ்ணாவில் இனிக்கும் தமிழ்

செல்வமூர்த்தி எனும்

செல்வத்தை சேர்த்த தமிழ்

வாசனின் வாசத்துடன்

வாசம் செய்த தமிழ்

வளவனின் நேசத்திலே

வலம்வந்த வசியத் தமிழ்

பரதம் பயின்ற தமிழ்

பைங் குழலோதும் தமிழ்

பாரதம் ரதமேறி

பாரதி  ஆனத் தமிழ் 

பாரதிய வித்தை பவன

மேடையில் அமர்ந்த தமிழ்

சுப்பையா முன்னுரைக்க  கலைமாமணி

முத்தையா பேச்சு உரைக்க

முத்தாரம் குவித்த தமிழ்

முக கவசம் மறந்த தமிழ் 

அவையோரை அகம் மகிழ

செவியோரம் நுழையும் தமிழ்

அலை அலையாய் கர ஒலியில் அவை எழுந்து முழங்கும் தமிழ்

நிலை மறந்து வாய் திறந்து ஜெய கோஷம் எழுப்பும் தமிழ்

போதும் என்ற போதும் அடங்காத துள்ளும் தமிழ்

வேணுமினு இன்பம் கொஞ்ச வேடிக்கை காட்டும் தமிழ்

நொய்டா பிறந்து தவழ்ந்து

யமுனைக் கடந்து வந்து உவந்து எதிர் உட்கார்ந்த தமிழ்

இன்று பாரதியை பாட வந்திருக்கிறது

 

சிறியார் பெரியார் வறியார் எளியார்

புரியார் தெரியார் அறியார் வலியார்

மதியார் மிதியார் அரியார் அரனார்

என எத்தெத்னை யார் கேட்டாலும்

பிள்ளையார் என்றால் பிள்ளையார் தானே

 பாரதி யார் என்றால் பாரதி தானே

 

 கண்களில் கதிர் எடுத்து கவிதையில் கனல் எடுத்து 

கைகளில் கோலெடுத்து தோள்களில் வாளெடுத்து 

வரிகளில் படையெடுத்து வார்த்தையில் அணுபிளந்து

சுதந்திர போர் புரிந்த சுப்பிரமணி அவன்.

விடுதலை  வேள்வியினில்  ஆகுதி ஆனவன்

விடாது தலையிருக்கும் முண்டாசு ஆடவன்

நூற்றாண்டு கண்டவனை நொடி பத்தில் பாராட்ட 

பாடும் திறமை இல்லை  பாராட்டும் திறனும் இல்லை

 பாக்கும் வெற்றிலையும் பளிங்கு சுண்ணாம்பும்  

போட்ட தாம்பூல பை போல ஒன்றிரண்டு  

அவன் பற்றி  சேர்க்க நான்  தந்தேன்  

செவிக்கு இனிதாய் சேர்த்திடுவீர் இனிதே

 

காரதிர வந்தால் கனமழை என்றுரைப்பார்

தேரதிர வந்தால் திருவிழா என்றுரைப்பார்

ஊரதிர வந்தால் உற்சவம் என்றுரைப்பார்

பாரதிர வந்தால் பாரதி தானே

 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லை ஒற்றுமை நீங்கில் தாழ்வு

நன்றென சிந்தை சொன்னான் பாரதம் பெற்றதை தந்தான்

இன்றதை பிரிவுகள் சொல்லி பிணக்குகள் செய்யலாமோ

கொன்றதை பேயினைப்போல் கணக்குகள் போடலாமா

ஒரு நாடு ஒரு உரிமை ஒரு பேச்சு ஒரு மூச்சு

ஒரு வீடு ஒரு மனது ஒற்றுமையாய் வாழலாமே

 

ஓடி விளையாடு ஓய்தல் கூடாது

கூடி விளையாடு வைதல் கூடாது

தேடி கவி படித்த பாப்பா பாட்டுகளில்

எத்தனை எளிமை தமிழ் எத்தனை அறிவுரைகள்

எத்தனை கவிநயம் எத்தனை ஆழ்பொருட்கள்

அத்தனையும் மறந்து போய் ஆங்கிலம் சிதைத்த தமிழ்

பேசத் தெரியாப்

பித்தரையும் புகழ்ந்து மேடை அசிங்கம் பட்ட தமிழ்

கற்றதெல்லாம் கலக மாகி பெற்றதெல்லாம் பிழைகள் ஆகி

புற்றில் கை விட்டதுபோல் புலம்பல் ஆகி புலம்பெயரும் இன்றோ?

அறம் கூறும் சபைகள் எல்லாம் அடிபணிதல் ஆகும் எனில்

மறை கூறும் நீதி எல்லாம் மந்தை என மாறும் அன்றோ?

உறவுகள் உரிமைக்காக உடைமைகள் ஒருவருக்காக

உணர்வுகள் நடிப்புக்காக உள்ளமிலை துடிப்புக்காக

திறவுகோல் இன்றி பாசப் பிணைப்புகள் பிரிதல் ஏனோ?

களவுகள் கடமை என்று இணைப்புகள் விரிதல் ஏனோ?

 

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என வெள்ளையனை சொன்னதே இன்று

வெட்கமில்லை மானமில்லை மக்கள் ஏய்க்கும் போதிலே

உள்ளமில்லை ஊனமில்லை ஊழல் செய்யும் போதிலே

என்று மாறவிட்டது ஏமாறவிட்டது நம் குற்றமே

இனியும் பொறுத்தல் சரியோ ?

 

பெண்டிர் சுதந்திரம் அவனது பலித்த கனவு

புதுமைப் பெண்கள் நிலை புரட்சி ஆகியது

மங்கையரின் மகத்துவம் மாநிலங்கள் பெருக்கியது

சமையலறை விட்டு திறமை ஆராய்ச்சி நிலைக்கு உயர்ந்தது

சுமைகள் குடும்பம் இருந்தும் அனைத்திலும் முத்திரை பதித்தது

இதையெல்லாம் கேட்டாயா பாரதி?

முண்டாசை தட்டிடுவீர் மீசை முறுக்கிடுவீர்

இருந்தும்

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிந்தது போல்

சொல்ல வாய் கூசுதய்யா சுதந்திரம் எனக்கூறி

கையிளம் பெண்களை கற்பழித்து சீரழிப்பார்

பொய்யெல்லாம் புனைந்து செய்திகள் பிரசுரிப்பார்

பள்ளிகள் போதையுடன் படிப்புகள் பாடையுடன்

கல்விகள் எல்லாமே கள்வரின் கயமையுடன்

கலப்படம் ஒரு பக்கம் களவுகள் ஒருபக்கம்

திரைப்படம் ஒரு பக்கம் இலவசம் ஒரு பக்கம்

உழைக்காமல் முன்னேற வசதிகள் ஒரு பக்கம்

மையலில் வெள்ளையன் நாட்டுக்கு அடிமைகளாய்

மதியை அடகு வைப்பார் மனசாட்சி விலைக்கு விற்பார்

பை நிறைய சேகரிப்பார் தாய் வயிறு காய்ந்துவிடும்

தந்தைக்கே இந்த கதி தாய் மண்ணுக்கு என்ன விதியோ ?

"பந்தத்தை நீக்கிவிடு அல்லால் உயிர் பாரத்தைப் போக்கிவிடு

சொந்தத்தை பெரிதாக்கு சொத்தை சிரிதாக்கு

தந்தத்தை போல் உறவை சாலப் பெரிதாக்கு

சிந்தை தெளிவாக்கு அல்லாவிடில் செத்த உடலாக்கு"

என்று சொன்னவரே எங்களை காத்தருளும்

 

தேசிய ஒருமைப்பாட்டின் கண்ணோட்டத்தில் இன்று

வெள்ளி பனிமலையில் மீது உலாவுகிறோம்

ஆழக்கடல் எங்கும் கப்பல் விடுகிறோம்

நிலவுக்கும் சென்று நீந்தி வர கற்றுக் கொண்டோம்

உலகத்தில் நல்ல பெயர் பெற்று கொண்டோம்

ஆயுதம் ஏற்றுமதி செய்கிறோம்

மென்பொருள் ஏற்றும் மதி செய்கிறோம்

  கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் இன்று

காவிரி வெற்றிலையுடன் காதலிக்கிறது

காஞ்சியின் பட்டு காஷ்மீரப் பெண்களின் கட்டு

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைக்க

சேதுவை மேடுறுத்த முயல்கிறது

காவிரியும் கோதாவரியும் நீர் வளம் பெருக்க

செயல்திட்டம் முனைகிறது

இன்னும் இலக்கை அடையும் வரையினில்

ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

தேற்றங்கள் செய்வோம் அதில் ஏற்றங்கள் செய்வோம்

நாற்றாங்கால் தலைமுறைக்கு நல்லதோர் உரம் செய்வோம்

ஆனால்

பள்ளி தளம் அனைத்தும் வணிகம் ஆக்கவிடோம்

பாரத தேசப்பண் பாட்டையே மறக்கவிடோம்

பாதகம் செய்பவரை பயந்து விட மாட்டோம்

சாதகம் ஆக்கி யவரை திருந்திட வழி செய்குவோம்

நதிகள் இணையும் வயல்கள் உயரும்

விதிகள் மதிக்கும் தர்மம் தழைக்கும்

வீதிகள் பிழைக்கும் வாழ்வுகள் சிறக்கும்

நீதியறதுறைக்கும் ஓய்வு கிடைக்கும்

பாரதியே உன் வரிகளாம்

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா

அமிழ்தில் இனியதடி பாப்பா நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் அதை தினமும் புகழ்ந்திட டி பாப்பா

வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்த திந்த நாடு

சேதமில்லாத இந்துஸ்தானம் இதை தெய்வம் என கும்பிடடி பாப்பா

 

எனக்கூறி

தமிழே வாழிய வாழியவே

தர்மம் வாழிய வாழியவே

பாரதி வாழிய வாழியவே

பாரதம் வாழிய வாழியவே

வணங்குகிறேன் . வந்தே மாதரம் .