Saturday, 30 August 2025

இந்திய சுதந்திர திரு நாள் 2025

 இந்திய சுதந்திர  திரு நாள் 2025



தர்மச் சக்கரம் நற்பாதை செலுத்திடின் 

சுதர்ம சுதந்திரம் வரும்


வர்ணம் சேர்த்து பறந்தது நற்கொடி

தருணம் சேர்த்தது இனி


வஞ்சம் அழித்து வம்சமே வளர்ந்தால் 

அஞ்சுமே பகைமை யாவும்


கற்கவும் கற்பிக்கவும் ஆயிரம் குறளுண்டு 

நிற்கவும் அர்த்தம் உடன்


நதிநீர் நன்றாயின் குடிநீர் அமுதாகும் 

நதிபாதை சுத்தமாய் செய்


வானம் பொழியும் வளமான மழைநீரை 

குளம்  முழுதும் நிறை 


ஆறுவது மனம் சேருவது தினம் 

கூறுவது சுதந்திர இனம்


ஏறுவது கொடி மாறுவது குடி 

நாடுயிது  அழியாத  நிதி 


வாய்மை உயர்நிலை தூய்மை உயிர்நிலை 

தாய்மை பண்பாட்டின் தலை


பற்றிவிடு  தேசம் குற்றமிட  நாசம் 

பெற்றவளின் சேவையினில் சுகம்


கூறுமொழி இனிக்க கேட்பதும் சுவைக்க 

நூறுமொழி ஒன்றாகும்  கூடி 


வீதிநதி  ஆக்க  நீதிநெறி  காக்க

ஆதியென தர்மவழி ஏகு 


தப்பை வளர்த்து தகுதியென மாற்றிடின் 

குப்பையே குவிந்து நாறும்


துரோகம்  நசுக்கி  குரோதம் விலக்கி 

பாரதம்  புவிவலம் வரும்


தந்திரம் அழித்து தன்திறம் சிறக்க 

எந்திரம்  கூட்டிடும் பணி

ஆடி கிருத்திகை 2025

 ஆடி கிருத்திகை 2025

                உனதருள் வேலே 

                   (சத்தியமணி)



இரு விழியும் போதுமோ உன் எழில் காண

ஒரு  நாவும் போதுமோ உன் புகழ் பாட 

சிறு மதியும் போதுமோ உன் மகிமைக் கூற 

திரு நொடியும் போதுமோ உன் அருகில்  வாழ.      

முருகா முருகா. 

முருகா முருகா. ()



சரவணபவ னென்னும் மந்திரம் கொடுத்தாய் 

சிரமதில் செந்தமிழ் இயந்திரம் பொறித்தாய் 

நரமிதில் கலியுக தந்திரம் 

மறுத்தாய் 

தரமதில் உயர்தெனக் குருவெனக் கிடைத்தாய் 

மரமதில் கனிவளம் கவிதைகள் சுவைத்தாய் 

வரமிது மகிழ்ந்திடு உளமதில் நிறைந்தாய் 



கிடைப்பதும் கொடுப்பதும் உனதருள் வேலே

காப்பதும் கழிப்பதும் உனதருள் வேலே

பார்ப்பதும் சேர்ப்பதும் உனதருள் வேலே

படிப்பதும் கேட்பதும் உனதருள் வேலே 

நினைப்பதும் நடப்பதும் உனதருள் வேலே 

இருப்பதும் சிறப்பதும் உனதருள் வேலே

கிருஷ்ணாஷ்டமீ 2025

 கிருஷ்ணாஷ்டமீ

           கீதம்.       கிருஷ்ணா

           ராகம்.       நீலாம்பரி

                  (சத்தியமணி)



நித்திரையைத் தரும் நீலாம்பரியோ 

கிருஷ்ணா

நிம்மதியைத் தரும்  பீதாம்பரியோ 

கிருஷ்ணா



முத்துகள் முத்தமிடும் மோகனனே  கிருஷ்ணா 

பித்தமெலாம் சேர்க்கும் கோவிந்தனே   கிருஷ்ணா


சத்தமில்லாமல் வரும் சாதுர்யனே 

மன

சஞ்சலம் போக்கிடும் தயாபரனே 

நித்தமும் விளையாடும் ஸ்ரீதரனே 

என் 

சித்தமெலாம் உனக்கே ஸ்ரீரங்கனே

பிள்ளையார் பிறந்தநாள் 2025


போதகம்  என்றதும் குதித்தோடி வந்தது 

மோதகம் பெற்றதும் வரம்கோடி தந்தது 


பாதகம் தடையாவும் பொடிபொடி தகர்த்தது

சாதகம் தருமாக்கம் துடியடி கொடுத்தது


கவிமுகம் கயமுனி  பிரமமாய் சேர்ந்தது 

மறைமுகம் துயர்வினை  மாயமாய் தீர்ந்தது 

அறிமுகம் தருமுகம் அருள்முகம் பார்த்தது

கரிமுகம் திருமுகம்  ஒருமுகம் ஏற்றது


கம்மெனச் சொன்னாலே கவலைகள் தீருமே 

கம்மெனச் சொன்னாலே  

கழுபிணி ஆறுமே 

கம்மெனச் சொன்னாலே 

கல்வியில் ஞானமே 

கம்மெனச் சொன்னாலே கணநாதம் கூடுமே

மன முதிர்ச்சி வரை


முள்ளின் வலி விலக்கும் வரை 

பல்லின் வலி எடுக்கும் வரை 

சொல்லின் வலி இறக்கும் வரை 

உள்ளின் வலி உயிர்க்கும் வரை

Friday, 5 January 2024

ஸ்ரீராஜபாலமுருகா

கணநாதன் கணேசன் கற்கண்டு தம்பியே கந்தனே செந்தில்நாதா
குணசீலன் மாமனாய் கொண்டாடும் பாலனே குங்கும வண்ணமார்பா 
பணமாலைகள் சூடும் மாமியாம் திருமகள் கட்டியே கொஞ்சுழகா
மனதோடு என்னோடு இருந்துவிடு மற்றெல்லா விளையாட்டும் விளையாடலாம்
மலைமீது ஏறாமல் மயிலோடு வந்தனைநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...1

ஏனிப்பிறவி என்கின்றபோது அதற்கென்ன பதிலுமில்லை 
வீணென்று நினைத்தால் விடியாத நாளாகும் முடிவில்லா பயணமில்லை
இயக்கமும் ஆக்கமும் முயற்சியும் விட்டுபய
அழற்சியில் வாழ்தல்நலமோ
கலக்கமும் தயக்கமும் குழப்பமும் மயக்கமும் வேலாலே அழிக்கவருவாய் 
மலைமீது ஏறாமல் மயிலோடு வந்தனைநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...2


சேயென் தலையெழுத்து தாயீன்ற  நேரம் 
தாயின் தலையெழுத்து தந்தையை சேரும்
தந்தை தலையெழுத்து பிரம்மனின் கைகோல் 
பிரம்மன் சிரங்களோ உன் வேலின்  கீழன்றோ
மலைமீது ஏறாமல் மயிலோடு வந்தனைநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...3

எட்டு திக்காக அழைத்துமே 
உன்செவியில் ஏதுமே விழவில்லையா 
ஏழு சுவரமாக பாடியும்நீ 
ரசிக்காது மனமில்லையோ 
ஆறு காலமும் ஆறுமுகாவென 
அழுவதும் இரக்கமிலையோ 
ஐந்து நிலமெல்லாம் குன்றேறியே அடியேனை காணவில்லையோ 
மலைமீது ஏறாது மயிலோடு வந்திடுநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...4

மாங்கனி கிடைக்காமல் போனதற்காக மலையிலே ஆண்டியானாய்
தேங்கனி வள்ளியை காதலால் வசப்படுத்த கிழவனாய் வேடனனாய் 
தூங்கா தேவரின் துயர் தீர்க்கவோ வேலேந்தி வீரனனாய் கந்தனனாய்
தாங்காத துயரோடு பாடுவேன் விளையாட்டாய் மறைந்துமே ஆடல் அழகோ 
மலைமீது ஏறாது மயிலோடு வந்திடுநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...5

வீணானப் பொருளாயின் வேண்டாமென வெளியிலே வீசிவிடுவார் 
காணாதப் பொருளாயின் கண்திருஷ்டி போனதென கண்மூடி தான்கழிப்பார் 
பாழானப் பொருளென்றே பண்டத்தை வழித்தெடுத்து பேயாற்றில் விட்டு எறிவார் 
பாட்டாலே பாடியுனை படாதபாடு செய்வேனோ குகசுவாமியே 
மலைமீது ஏறாது மயிலோடு வந்திடுநீ முருகனே பழனிச்சாமி
சுயமாகவே வளரும் சுப்பிரமணியே கேள் ஸ்ரீராஜபாலமுருகா ...6


மடியினில் எடுத்தெனை

மடியினில் எடுத்தெனை யாழென மீட்டு
தமிழதன் தவமெனப் பேற்றினைக் கூட்டு ()

படித்திடும் பார்வையும் 
பயின்றிடும் வார்த்தையும்
நிலைத்திடும்படி யினி 
செய்வதுன் பொறுப்பு 
கிடைத்திடும் திறமையும்
நிலைத்திடும் பெறுமையும் 
அருளிடும் அமைதியும்
வாணிநின் சிறப்பு ()

வழங்கிடும் வாய்மையும்
வெள்ளுடைத் தூய்மையும்
செல்வமும் சொல்வளம் 
வந்திடும் ஏற்று 
இன்னுயிர் உன்னிடம்
உன்துதி என்னிடம்
கண்கடை காட்டியே
நாவினில் ஊற்று ()

பால முருகன் சிரிப்பு

பால முருகன் சிரிப்பு 
பவழக்கொடி மலர்ந்த முத்துக்களின் களிப்பு ()

கோலமயில் மீது வலம் வருவான்
கும்பிடும் முன்னாலே அருள் தருவான்
வாவென் றழைத்தவுடன் வளம் தருவான்
தாவெனத் தமிழ் கேட்டு தரிசனம் தருவான் ()

வேலுடன் தரும் காட்சி மனம் நிறைக்கும்
சேலமும் சீலமும் குறை கலைக்கும்
மாலுடன் மருமகனே நம்பிக்கை பிறக்கும்
நாளுடன் நவக்கோளும் நல்லதெலாம் அளிக்கும் ()

காக்க நீயிருக்க கவலைகள்

காக்க நீயிருக்க கவலைகள் எனக்கெதற்கு 
பார்க்க பார்க்க எனை பரவசமே உனக்கு   ()

நீக்கமற நெஞ்சிலே அமர்ந்தவனே  முருகா நீ
நினைத்தபடி நல்லவை நிகழ்ந்திட அருள் புரிவாய் ()

சுயமாய் வந்தருளி வளரும் ராஜபாலா 
சுயமாலயம் அலங்கரிக்கும் உமைக்குமரா 
வேலுடன் மயிலோடு தரிசனம் தயையுனக்கு
தேவைகள் அறிந்துடனே தருவாய் வளமெனக்கு  ()

சமர்ப்பணம் ....சத்தியமணி

சரவணபவனெனும்

சரவணபவனெனும் போது
கரைந்திடும் மனது கவலைகள் மறைந்து ()

அலைகளில் செந்தூர் 
அருவியில் திருக்குன்றம் 
அமைதியில் பழனி 
அருளினில் சுவாமியென ()

மருந்திட மருதம்
அருந்திட தணிகை
கனிந்திட சோலையென 
நினைந்திட வேலவனை ()

அறுபடை அமர்ந்து
அசுரரை அழித்து 
பக்தரைக் காக்க
வேலும் மயிலுடனே ()
சமர்ப்பணம் சத்தியமணி
05-11-23