Thursday, 19 December 2013

கண்டேன் கண்டேன் காண்கின்றேன்

கண்டேன் கண்டேன் காண்கின்றேன்
கண்களுக்கினியானய் காதற்பெருக்கினால்()
வண்டுகள் விழியத‌னாற் மனங்குடைந்தான்
உண்டுகள் அதரங்கள் வழிந்திட அழைக்கிறான்
கண்டுமுன் காணாமல் நடிக்கிறான்
நண்டுதன் கொடுக்குபோல் வாரியே அணைக்கிறான் ஆகா ()
அசைந்திடும் மயிற்பீலி வசமிடதொடுத்தான்
இசைத்திடும் குழல்ராகம் மயக்கிட சிரித்தான்
பசையினில் என்னுடன் கலந்து களிக்கிறான்
விசையெனும் பக்தியில் என்னையும் இயக்கினான் ஆகா ()
தேடிடும் போதெதிர் வந்தெழில்ரசிக்கிறான்
ஏடிடும் முன்இவனே கவிதைப் படிக்கிறான்
கூடிடும் தாளமும் தட்டிதலை அசைக்கிறான்
பாடிடும் என்னோடு கண்ணனும் இருக்கிறான் ஆகா ()

செம்பொன் சோதீசன் பதிகம்

(இலாலாப்பேட்டை, குளித்தலை கரூர் இணைக்கும் சாலையில் உள்ளது. எனது இளம்பிராயம் அங்கு தான் அனுபவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைப் பணியில் கோயில் இடம்மாறி புதுபிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம் கொட்டிகிடக்கும் இக்கிராமத்தில் அருள்வல நாயகனை கண்டு தரிசனம் செய்ய இப்பதிக காணிக்கை.)
நாமம்
அகண்ட காவிரியின் தென்கரைச்    சீலமாக்க‌
உகந்த     நிலமென்று  உமையோடு குடியமர‌
முகர்ந்த மலர்கதம்ப  மல்லிகை      மாலைசூடி
சகண்டை நாதமோடு செம்பொன்   சோதீபோற்றி

நிலம்
கீழ்திக்கில்        கடம்பராக‌     தென்கீழ்     ரத்தினக்கிரி
தென்திக்கில்    சொக்கனாய் தென்மேல் நாமகிரி
மேற்திக்கில்      கொடுமுடி    வடமேற்கு ஞானகிரி
வடதிக்கில் கொள்ளிசித்தன் ஈசானம்  மரகதகிரிவாழி

தலம்
வாழைதன் தோட்டமோடு தென்னைசூழ்  பச்சையாக‌
தாழையின் வாசம்சேர்     தளிர்வெற்றி    லைப்பாக்கு
பேழைவயி ற்றெடுத்த     பெரும்பிள்ளை வேலனோடு
மாழையாய் செம்பொற்   சோதியான்  பாதம்போற்றி

தீர்த்தம்
தவமுடை முனிவரோடு     சித்தரும் குழுமிநிற்க‌
சிவசிவ       நாதமோடு          நந்தியும்  ஓதிநிற்க‌
புவனமும் பொன்னியோட‌   செம்பொன்  துறைசேர்
ப‌வனமும் அணியுமாக    பல்வினைப் போகுமாமே

விருட்சம்
பொன்னியில் தலைமூழ்கி புதுகுட நீரெடுத்து
பொன்னீசன்   குளிரவென   அபிடேகம் செய்வித்து
பொன்மஞ்   சற்மலரோடு    வில்வத்தால் பூசித்து
பொன்சடை யேற்றிபாடு குலம்வாழச் செய்யுமாமே

அருள்
நம்பிக்கை பக்திநேச‌ம்    தருமமொடு   வாய்மையுமே
கும்பிடும்  அன்புநேயம்  குறைகாணா  பிறைசூடன்
அம்பரத் தாடுவான்முன் அனைத்தோடு துதிசெய்யாய்
பம்பர  மனதடங்கி பல்காலம் நலங்காண்பாய்

மகிமை
திருநீறு தரித்துவரின்     அறிவோடு நலமேறும்
திருநீறு அணிந்துவரின்  கேடுதசை மாறிவிடும்
திருநீறு பூசிவரின்    பெருநோயும் ஓடிவிடும்
திருநீறு குளித்துவரின் தீராதவினைத் தீறும்

வாழ்த்து
வாழியச் செம்போற்சோதி வாழிய தருமவர்த்தனி
வாழியத் தொண்டர்குழாம் வாழிய தருமநெறி
வாழிய    வையகமும்   வாழிய இந்நிலமும்
வாழிய   கங்கையென வற்றாமல் பொன்னியுமே!!

மகாகவி பாரதியும் மெகா தொடர் பாரதமும் (பண்டார பாட்டு - 2013)


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இலவசங்கள் பெற்றும் மாற்றி ஓட்டுபோட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
வாக்குறுதி அத்துனையும் மறந்து விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
வரிக்குமேல் வரிகள் போட்டு வசூலித்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
சேதுசிதைத்து ஈழம்பிரிந்து வாடுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பெரும்பாண்மை பெற்றும்பின்னர் சிதறுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இலஞ்சமென்று ஆயிரந்தான் தெரிந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
காவிரியா கங்கையுமே காயவைத்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
சாதிகள் சொல்லி கட்சி கூட்டம் சேர்க்கும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
தங்கத்தாலி பறிகொடுத்து தவிக்குங்குரல் கேட்கினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
ஒற்றுமைக்கு வேட்டு வைத்து ஒழுக்கம்வீழும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
டாலர்ஏற ரூபாயிங்கு சரியவைக்கும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
மின்வெட்டு விலைகளிங்கு வானைத்தொட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
அடிக்கடி தேர்தல் என்று  அசிங்கம் பட்ட போதிலும்

மிச்சமில்லை வெட்கமில்லை  சொல்வதற்கு இல்லையே

Monday, 21 October 2013

வாழ்க்கைக்கு அர்த்தங்காண்

நாத்திகரை ஆத்திகராக மாற்றும் மதபோதகர் இல்லை யாம்
பணமாற்றத்திற்காக மதம்மாற்றும் சுகமாந்தர் இல்லை யாம்
பிறர்சொல்வதைக் கேட்டு தலையாட்டும் சிறுத்தறிவும் இல்லை

பகுத்தறிவு என்றுசொல்லி பண்படாத‌ பருத்தறிவும் இல்லை


தெரியும் வரையில் கீழே வெறும் மண்,கல்
தெரிந்தபின் ஆன்றோரின் சிதைந்தத்தோல்
வீசும் வரை மண்டலத்தின் வெறுங்காற்று
பேசும்போது கைபேசியின் மின்னொலிஅலை


அசுரத்தனமாய் பேசவைக்கும் இளமைக் களி
அலட்சியமாய் சீண்டியக் கொசுவின் டெங்கில்பலி


அடிமைகளால் கட்டிய தில்லி கோட்டைகள்
அரசர்கள் எங்கே ? அந்தப் புரங்கள் எங்கே? 
எரிந்தது சிலரோடு எலும்பினில் சிலர்வீடு
தெரிந்ததா இதற்கு வயதில்லை!வரம்பில்லை!


வறுமையில் ஒருபக்கம் பட்டினிபிணி - விதியென்றார்
வாய்ப்பினில் ஒருபக்கம் கறுப்புபணம் - மதியென்றார்
வரலாற்றில் விழுந்தால் நிகழ்காலம் வீணாகும்
வாலிபத்தில் விழுந்தாலோ வருங்காலம் பாழாகும்


எதிர்காலம் வளமாக்க ஏழ்மைகளின் இல்ல‌ங்காண்
முதிர்ச்சிக்கு முன்னாலே வாழ்க்கைக்கு அர்த்தங்காண்

Monday, 7 October 2013

கொலுவிருக்க வந்தனளே

சக்தி ரதத்தில் தேவியர்களுக்காக‌ என்னுடைய எளியத்  தமிழ் தோரணங்கள் !  

கொலுவிருக்க வந்தனளே புவனேஸ்வரி - ராஜ‌
கொலுவீற்று  அரியணையில் ராஜேஸ்வரி
தொழுமடியார்  அன்பில் சக்திரதமேறி - தினம்
பொழிந்தனளே தமிழ்சிந்தும் ஞானேஸ்வரி ()

படியென்று பலகலைகள் பயில வைத்தாய்
படிபடியாய் படியேற்றி உயர‌ வைத்தாய்
அடியெடுத்து உள்நுழைந்து அலங்கரித்தாய் - சக்தி
வடிவெடுத்து அடியார்க்கு  நலம‌ளித்தாய் ( )

மலைமகளாய் வீரத்தை எமக்களித்தாய்
அலைமகளாய் அருட்செல்வப் பெருக்களித்தாய்
கலைமகளாய் இசைக்கவிதைச் செவிக்களித்தாய்
நிலைமகளாய் கீர்த்திபுகழ் சிசுக்களித்தாய் ( )

நவராத்ரி நோன்பிருக்க மனமளித்தாய்
நவமணியாய் சுண்டலெனச் சுவையளித்தாய்
தவமியற்ற தெரியாது! துதியளித்தாய் - அதைத்
தவமென்று நிறைவேற்றி  அருளளித்தாய்()

Monday, 2 September 2013

பாடுங்கள் தமிழாள் வாழ!

வாருங்கள் பலகோடி சேர    மகளிர்    நிலமேக!

பாடுங்கள்  தமிழாள்  வாழ!   நிலத்து   நலமாக !

பருவங்கள் மாறும் தமிழகராதியில் பெண்ணின் வாழ்க்கை

புருவங்கள் ஏறும்  அறிவீர்!அவள்  புன்னகை சேர்க்கை ()



பேதைமெய்     சிறுமிகுறுமி  பாலை வடிவெடுத்தாள் (5-7)

பெதும்பையே  ஆகத்தருவி  தும்பை  நுனிபிடித்தாள் (8-11)

மங்கையாய்     பருவமெய்தி  பெண்மை பெயர்ந்தாள் (11-13)

மடந்தையாள்  மாந்தளிராகி  மலராய்  சிரித்தாள் (14-19) ()



அன்னமன் னந்நடை அரிவையாகி காதல் கற்றாள் (20-25)

தெரிவை எம்மைத் தெரிவாயென இல்லறம் கண்டாள் (26-31)

பேரிளம்பெண்  அன்னை யென்றே பாசம் பொழிந்தாள் (32-40)

நுங்கையாகி  நற்றமிழ் எழுதிட கற்று கொடுத்தாள் ()

 நங்கையாகி உறவுகள் ஏற்று  பெண்ணில் சிறந்தாள் - மாலன்
தங்கையிவளே ! மகளாய்  பிறந்தாள்  சக்தி மகிமை!
முதுமையென முடிவெண்மை யாகினும் என்றுமிளமை
புதுமையாய்   இதைக்கவியில் வடிக்க தந்தேனுவமை ()

நங்கையாகி உறவுகள் ஏற்று  பெண்ணின் பெருமை - மாலன்
தங்கையிவளே ! மகளாய்  பிறந்தாள்சக்தி மகிமை !
முதுமையென முடிவெண்மை யாகினும் என்றுமிளமை

புதுமையாய்   இதைக்கவியில் வடிக்க தந்தேனுவமை ()

அன்பாலே திருத்தப் பாருங்கள்

அடி நாக்கிலே நஞ்சு கள்வைத்து,
 நுனி நாக்கிலே அமிர்தமாக்குவார்
பேசும் போதிலே சிரிப்பைக்காட்டி
கூசும்படியதை  வஞ்சமாகுவார்
யாரைப் பேதை மனம் நம்பும்
நீர்நிலை யில்கண் குழம்பும் ()

கொட்டி திட்டிவிடும் எதிரிநண்பரே
சிரித்து கெடுக்கும் நண்பர் ஏதிரியே
போற்றி போற்றியென புகழைப்பாடி
தூற்றினார் திரைமறைவில் கோடி
வீற்றிருப்பார் நம் பக்கம்
தான்களிப்பார் நம் துக்கம்
அடையாளம் கண்டுகொள்ளுங்கள்
அன்பாலே திருத்தப் பாருங்கள் ()

கண்கள் காண்பதுவும் பொய்யானால்
காதில் கேட்பதுவும் பொய்யானால்
சிரித்து வாழ்தத்துவதும் பொய்யானால்
துதித்து கலப்பதுவும் பொய்யானால்
வாழ்க்கைத் தான் தடுமாறும்
வழக்கில்  நாளும் ஏமாறும்
அடையாளம் கண்டுகொள்ளுங்கள்

அன்பாலே திருத்தப் பாருங்கள் ()

கேளாயோ பாரதமே !

கண்ணீரில்   அவர்கள்   கைகட்டி     இவர்கள்
தண்ணீரில்    சட்டம்      டைகட்டி      திட்டும்
புதுமைப்      பெண்டிர்     புகழ்சொன்ன பாரதி
புலம்பி         அழுவதை  எத்த்மிழிர் கேட்டனரோ
பசும்பொன்  புன்னகை    ததும்பிடும்    காந்தி
விசும்பல்     ஒலிகூட     உம்காதில்  சேராதோ
இப்போது     இந்நாளில்  இனிமேலும்  குறைவது
பாதுகாப்பு   பண்பாடு       குலநீதி       நற்குண்மே
எப்போது      எந்நாளில்   இவையாவும் சீராகும்
தப்பொன்றை காணாமல் இருந்தாலே  கேடாகும்

கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே    

அப்பா (தந்தையர் தினத்தில்)

நிறுத்தி சொன்னால் பாசம் தெரியும்
மெதுவாய் சொன்னால் கடினம் விலகும்
கத்தி சொன்னால் தனிமைத் திணறும்
கதறி சொன்னால் விலகல் புரியும்

நீட்டி சொன்னால் நிறைவென அர்த்தம்
நினைத்து சொன்னால் ஞாபகத் தருணம்
அழகாய்ச் சொன்னால் அன்பளிப்பாலோ ?
அடுக்காய்ச் சொன்னால் ஆச்சரியத்தாலோ !

சொல்லி பாருங்கள் வாயினில் - மனத்தில்
பொருளைக் காணலாம் தந்தையர் தினத்தில்
தந்தையர் ஆனதுஎல்லாம்  - புவியில்
முந்தைநல் வினைகளின் மூலப்பயனே!
!

எங்கே போகிறது காலம்



சுதந்திரதின நல் வாழ்த்துகள்
வாழிய பாரதம்!வாழியத் தமிழ்!

எங்கே போகிறது காலம்
இங்கே யேனலங் கோலம்
மேலே எழுகிறது நாசம்
கீழே  விழுகிறது தேசம்…...()

குழிகள்பறித்து   முடமானார்
விழிகளிருந்தும் குருடானார்
செவிகளிருந்தும் செவிடானார்
அறிவுசெழித்திருந்தும் ஊமையானார் ..()

கற்ற    கல்வி  தரும் பட்டம்
உற்ற  வேலை யின்றி கட்டம்
வரிகள் போக வருமானம்-அவ
மானம் இங்கு வெகுமானம் ……..()

மதங்கள்  பிரித்து பெறும் ஓட்டு
மதிக்கும் பெரியவர்கள்   கூட்டு
சாதி பெயரில் வாக்கு சீட்டு
மதச்சார்பின்மை என்றும் பாட்டு ……..()

நீதிநியாயம் வெறும் பேச்சு
பாதிதர்மம் எங்கு போச்சு
வாய்மைவெல்லுமெனும் சிங்கம்

என்று தீர்க்கும் இந்த அசிங்கம்……..()

அடி வானம் சிவந்தது

அடி வானம் சிவந்தது
அது ஏன்?
இத்தனை அடிகளா கொடுப்பது
அடிகளில் கண்ணிடச் சிவப்பது
இருந்தும் எப்படி பொறுப்பது ?
இதற்கு ஒருதீர்வை எடுப்பது ?
மருந்திடு பாட்டி வைத்தியத்தால்
மூலிகை தென்றல் எழும்பச்சொல்
சுரந்திடும் அமுத மேகங்களால்
சுகமாய் ஒத்தடம் தந்திடச்சொல்
நாளை விடுமுறை எடுத்துவிட்டால்...
அடுத்தக் கவிதை எப்படி ?
வண்ண தனுசுகள் வந்துவிட்டால்


தொடுக்கும் அம்புகள் இப்படி!

பந்தக் காப்புரிமை (ரக்ஷாபந்தன்)



 (published in vallamail.com)


மதுரைநாயகி மீனாட்சி காப்பிட்டு கொண்டே கண்ணனிடம் இயம்புகிறாள்

ஒவ்வொரு அணுவிலும் இருப்பவனே
ஒவ்வொரு நிகழ்விலும் தெரிபவனே
காரணக் காரணம் ஆனவனே
கருணை கடலில் துயில்பவனே
மலையைக் குடையாய் பிடித்தவனே
மதுவை  விழியில் விடுப்பவனே
அன்பைச் சிரிப்பாய் அளிப்பவனே
அழகிய! அழகா! என் அண்ணா!
பாஞ்சாலிகளின் கதைதினமும்
பாரதமண்ணில் நடக்குதடா
பாரதிருப்பது முறையோ-உன்
பாஞ்ச சைன்யம் முடங்கியதோ
நீதிநியாயம் தர்மமெலாம்
மீதியின்றி வறள்வதன்முன்
அவதாரம் உடன் எடுப்பாயே
அருளால்  இப்புவிக் காப்பாயே!

காப்பிட்டத் தங்கைக்கு கண்ணன் கூற்று

ஒவ்வொரு உயிரையும்  பெற்றவளே
உண்டிடப்   பால்தரும்      உற்றவளே
சூலமும்      வாள்படைத் தாங்கிடவே
காலமும்    சுழற்சியும்     ஏற்பவளே
என்னிடம் அன்பைப் பொழிபவளே
எங்களின் சக்தியின்    இமையவளே
தாய்மையின் வடிவே! உமையவளே!
சேய்குலம் காப்பது   நீயல்லவோ?
செல்வமும் வளமும் காத்திடுவாய்
சிறப்புகள்   சேமங்கள் கூட்டிடுவாய்
அழைத்ததும் சிங்கத்தில் விரைபவளே
அருள்வதில் உன்னினும் உயர்வுளதோ?

சரணம்
அன்னையும் அண்ணனும் காப்பதனால்
அகிலமும்     அன்பால்  சுழலுதடா
துன்பமும் துயரமும் போகுமடா

உண்மையும் உறவும் நிலைக்குமடா