(இலாலாப்பேட்டை, குளித்தலை கரூர் இணைக்கும் சாலையில் உள்ளது. எனது இளம்பிராயம் அங்கு தான் அனுபவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைப் பணியில் கோயில் இடம்மாறி புதுபிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம் கொட்டிகிடக்கும் இக்கிராமத்தில் அருள்வல நாயகனை கண்டு தரிசனம் செய்ய இப்பதிக காணிக்கை.)
நாமம்
அகண்ட காவிரியின் தென்கரைச் சீலமாக்க
உகந்த நிலமென்று உமையோடு குடியமர
முகர்ந்த மலர்கதம்ப மல்லிகை மாலைசூடி
சகண்டை நாதமோடு செம்பொன் சோதீபோற்றி
நிலம்
கீழ்திக்கில் கடம்பராக தென்கீழ் ரத்தினக்கிரி
தென்திக்கில் சொக்கனாய் தென்மேல் நாமகிரி
மேற்திக்கில் கொடுமுடி வடமேற்கு ஞானகிரி
வடதிக்கில் கொள்ளிசித்தன் ஈசானம் மரகதகிரிவாழி
தலம்
வாழைதன் தோட்டமோடு தென்னைசூழ் பச்சையாக
தாழையின் வாசம்சேர் தளிர்வெற்றி லைப்பாக்கு
பேழைவயி ற்றெடுத்த பெரும்பிள்ளை வேலனோடு
மாழையாய் செம்பொற் சோதியான் பாதம்போற்றி
தீர்த்தம்
தவமுடை முனிவரோடு சித்தரும் குழுமிநிற்க
சிவசிவ நாதமோடு நந்தியும் ஓதிநிற்க
புவனமும் பொன்னியோட செம்பொன் துறைசேர்
பவனமும் அணியுமாக பல்வினைப் போகுமாமே
விருட்சம்
பொன்னியில் தலைமூழ்கி புதுகுட நீரெடுத்து
பொன்னீசன் குளிரவென அபிடேகம் செய்வித்து
பொன்மஞ் சற்மலரோடு வில்வத்தால் பூசித்து
பொன்சடை யேற்றிபாடு குலம்வாழச் செய்யுமாமே
அருள்
நம்பிக்கை பக்திநேசம் தருமமொடு வாய்மையுமே
கும்பிடும் அன்புநேயம் குறைகாணா பிறைசூடன்
அம்பரத் தாடுவான்முன் அனைத்தோடு துதிசெய்யாய்
பம்பர மனதடங்கி பல்காலம் நலங்காண்பாய்
மகிமை
திருநீறு தரித்துவரின் அறிவோடு நலமேறும்
திருநீறு அணிந்துவரின் கேடுதசை மாறிவிடும்
திருநீறு பூசிவரின் பெருநோயும் ஓடிவிடும்
திருநீறு குளித்துவரின் தீராதவினைத் தீறும்
வாழ்த்து
வாழியச் செம்போற்சோதி வாழிய தருமவர்த்தனி
வாழியத் தொண்டர்குழாம் வாழிய தருமநெறி
வாழிய வையகமும் வாழிய இந்நிலமும்
வாழிய கங்கையென வற்றாமல் பொன்னியுமே!!

I came to know it was circulated and recited by devotees! om nama shivaya
ReplyDelete