Saturday, 30 August 2025

இந்திய சுதந்திர திரு நாள் 2025

 இந்திய சுதந்திர  திரு நாள் 2025



தர்மச் சக்கரம் நற்பாதை செலுத்திடின் 

சுதர்ம சுதந்திரம் வரும்


வர்ணம் சேர்த்து பறந்தது நற்கொடி

தருணம் சேர்த்தது இனி


வஞ்சம் அழித்து வம்சமே வளர்ந்தால் 

அஞ்சுமே பகைமை யாவும்


கற்கவும் கற்பிக்கவும் ஆயிரம் குறளுண்டு 

நிற்கவும் அர்த்தம் உடன்


நதிநீர் நன்றாயின் குடிநீர் அமுதாகும் 

நதிபாதை சுத்தமாய் செய்


வானம் பொழியும் வளமான மழைநீரை 

குளம்  முழுதும் நிறை 


ஆறுவது மனம் சேருவது தினம் 

கூறுவது சுதந்திர இனம்


ஏறுவது கொடி மாறுவது குடி 

நாடுயிது  அழியாத  நிதி 


வாய்மை உயர்நிலை தூய்மை உயிர்நிலை 

தாய்மை பண்பாட்டின் தலை


பற்றிவிடு  தேசம் குற்றமிட  நாசம் 

பெற்றவளின் சேவையினில் சுகம்


கூறுமொழி இனிக்க கேட்பதும் சுவைக்க 

நூறுமொழி ஒன்றாகும்  கூடி 


வீதிநதி  ஆக்க  நீதிநெறி  காக்க

ஆதியென தர்மவழி ஏகு 


தப்பை வளர்த்து தகுதியென மாற்றிடின் 

குப்பையே குவிந்து நாறும்


துரோகம்  நசுக்கி  குரோதம் விலக்கி 

பாரதம்  புவிவலம் வரும்


தந்திரம் அழித்து தன்திறம் சிறக்க 

எந்திரம்  கூட்டிடும் பணி

ஆடி கிருத்திகை 2025

 ஆடி கிருத்திகை 2025

                உனதருள் வேலே 

                   (சத்தியமணி)



இரு விழியும் போதுமோ உன் எழில் காண

ஒரு  நாவும் போதுமோ உன் புகழ் பாட 

சிறு மதியும் போதுமோ உன் மகிமைக் கூற 

திரு நொடியும் போதுமோ உன் அருகில்  வாழ.      

முருகா முருகா. 

முருகா முருகா. ()



சரவணபவ னென்னும் மந்திரம் கொடுத்தாய் 

சிரமதில் செந்தமிழ் இயந்திரம் பொறித்தாய் 

நரமிதில் கலியுக தந்திரம் 

மறுத்தாய் 

தரமதில் உயர்தெனக் குருவெனக் கிடைத்தாய் 

மரமதில் கனிவளம் கவிதைகள் சுவைத்தாய் 

வரமிது மகிழ்ந்திடு உளமதில் நிறைந்தாய் 



கிடைப்பதும் கொடுப்பதும் உனதருள் வேலே

காப்பதும் கழிப்பதும் உனதருள் வேலே

பார்ப்பதும் சேர்ப்பதும் உனதருள் வேலே

படிப்பதும் கேட்பதும் உனதருள் வேலே 

நினைப்பதும் நடப்பதும் உனதருள் வேலே 

இருப்பதும் சிறப்பதும் உனதருள் வேலே

கிருஷ்ணாஷ்டமீ 2025

 கிருஷ்ணாஷ்டமீ

           கீதம்.       கிருஷ்ணா

           ராகம்.       நீலாம்பரி

                  (சத்தியமணி)



நித்திரையைத் தரும் நீலாம்பரியோ 

கிருஷ்ணா

நிம்மதியைத் தரும்  பீதாம்பரியோ 

கிருஷ்ணா



முத்துகள் முத்தமிடும் மோகனனே  கிருஷ்ணா 

பித்தமெலாம் சேர்க்கும் கோவிந்தனே   கிருஷ்ணா


சத்தமில்லாமல் வரும் சாதுர்யனே 

மன

சஞ்சலம் போக்கிடும் தயாபரனே 

நித்தமும் விளையாடும் ஸ்ரீதரனே 

என் 

சித்தமெலாம் உனக்கே ஸ்ரீரங்கனே

பிள்ளையார் பிறந்தநாள் 2025


போதகம்  என்றதும் குதித்தோடி வந்தது 

மோதகம் பெற்றதும் வரம்கோடி தந்தது 


பாதகம் தடையாவும் பொடிபொடி தகர்த்தது

சாதகம் தருமாக்கம் துடியடி கொடுத்தது


கவிமுகம் கயமுனி  பிரமமாய் சேர்ந்தது 

மறைமுகம் துயர்வினை  மாயமாய் தீர்ந்தது 

அறிமுகம் தருமுகம் அருள்முகம் பார்த்தது

கரிமுகம் திருமுகம்  ஒருமுகம் ஏற்றது


கம்மெனச் சொன்னாலே கவலைகள் தீருமே 

கம்மெனச் சொன்னாலே  

கழுபிணி ஆறுமே 

கம்மெனச் சொன்னாலே 

கல்வியில் ஞானமே 

கம்மெனச் சொன்னாலே கணநாதம் கூடுமே

மன முதிர்ச்சி வரை


முள்ளின் வலி விலக்கும் வரை 

பல்லின் வலி எடுக்கும் வரை 

சொல்லின் வலி இறக்கும் வரை 

உள்ளின் வலி உயிர்க்கும் வரை