Wednesday, 14 August 2013

மறதி!

கண்ணாடி தன்னைத் தேடி கடைசியில்
தலையில் கண்டது கண்கள்
வெட்டி பேச்சில் பாதைமறந்து
வெளுத்துப் போனது கால்கள்
ஆத்திரம் வந்து அடுக்களை தன்னில்
பொங்கி வழிந்தது பாலாறு
சூத்திரம் கற்றும் மனம் தள்ளாடி
தூங்குகின்றது…கோளாறு
தானாய்ப்பேசி பைத்தியமென்றனை
ஆக்கவிட்டது கைபேசி
கற்சிலையாக ஓரிடச்சிறையாய்
கட்டிப் போட்டது கணினி
தடவித் தடவி கடவுச் சொல்லை
தேடிஅயர்ந்தது  *வங்கியியங்கி
குருவி போல கொத்திப்போட்டும்
கிடைக்கவில்லை புத்தாடை
ஆங்கிலக் கெட்ட வார்த்தையில் வாயும்
ஐயோ   என்றது தமிழில்
தங்கைப் பெயரில் தவறாய் அழைக்க‌
தடியடி யானது வீட்டில்
மாத்திரை என்று உறையுடனிட்டு
மாட்டி கொண்டது  வாயிலே
பயணச்சீட்டைக் கேட்டதும் தெரிந்தது
அதுவும் வீட்டு பையிலே
தாமதமாக வாழ்த்துகள் சொல்வது
தரணியில் இன்று நிகழ்வது
ஓட்டை போட்டப்  பின்னால் வந்து
ஊழல்  அரசை இகழ்வது
விமானம் கிளம்பிய வேகத்திலே
வந்தது வீட்டைப்பூட்ட மறந்தது
தன்மானம் தான்விட்டுவிடாது
மறதியில் மட்டும் வளர்ந்தது
எங்கே வைத்தோம் என்றே நினைத்து
திகிலடைந்த சிலநேரம்
எங்கோ வைத்தோம் என்றே மறந்து
வாழ்க்கை சென்றது வெகுதூரம்

*வங்கியியங்கி==ATM

2 comments:

  1. மறதியில் மறதியை மறந்து போனேன் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்