கவிதை வரிகளில் கலந்து வாழி
தமிழின் அழகினில் நிறைந்து வாழி
அரங்கனோடு நீ உரங்கப்பா -உன்
அடிகள் சேருமென் இரங்கற்பா (வாலி)
அமுத வரிகளில் இசையக் கலந்தாய்
அரியக்கருத்துகள் இழையச் சுரந்தாய்
இருந்த போதினில் பாதி உணர்ந்தேன்
இழந்தப் போதினில் யாவும் இழந்தேன்
வாலி பெயரதின் மகிமையோ இது (வாலி)
செவிலித்தாயெனச் சேய்க்கு கிடைத்தாய்
செவியில் ஓய்வினில் தமிழைக் கொடுத்தாய்
தூங்கச் செல்லுமுன் துயரம் அழித்தாய்
இன்று தூங்கியேன் துக்கம் அளித்தாய்
வாலி பெயரதின் அருமையோ இது (வாலி)
நதியின் புதரினில் தாடிக் காண்பேன்
கதிரைப் பொட்டுடை நெற்றி காண்பேன்
விதியின் வெகுண்டெழும் கோபம் காண்பேன்
மதியில் குளிர்ந்திடும் சிரிப்பும் காண்பேன்
வாலி பெயரனில் உரிமையோ இது (வாலி)

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்