Wednesday, 14 August 2013

அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்!

(நரசிம்மர் பிறந்ததினம் முன்னிட்டு ஓம் நமோ நாராயணா )

அரக்கனின் மகனாய்        இருந்தாலும்
அன்புடன்    பக்தியும்       செய்ததனால்
அவனது      துயர்தனை   துடைத்திடவே
அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

தூணிலும்     இருப்பது    அவன்வலிமை
துரும்பிலும்  மறைவது  அவன்மகிமை
துன்பங்கள்   துடைக்கும்  அவன்பெருமை
அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

வெம்மையின்  சீற்றமும் தணியும்வரை
செம்மையின்  குருதியும் குளிரும்வரை
தம்மையும்       கவசமாய்  உள்ளம்வரை
அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

அரக்கரின் வரங்களை    மாற்றிடுவான்
அசுரரின்    வன்மங்கள்   போக்கிடுவான்
அன்பரின்   சேமங்கள்      அறிந்திடுவான்
அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

உக்கிர விளம்ப     வீரமுகம்
குரோத அகோர    கோபமுகம்
யோக   சுதர்ஸன லஷ்மியென‌
அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

தூணிலிருந்து         பிளந்த    முகம்
தானாயிருந்து        வள‌ர்ந்த முகம்
தவிக்கஅசுரனை     இழுத்த‌ முகம்
அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

அசுரக்குடல்  தனைஅறுத்த முகம்
அவனுயிர்     அழித்துகளித்த முகம்
அன்புடன்       கோபம்தணிந்த முகம்
அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

தானெனும் இரணியர் உடற்கிழித்து
கூனெனும் நஞ்சினை உடன்குடித்து
நானெனும் மமதைத்  தான் அழித்து
அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

தாயாய்    நம்மைக் காத்திடுவான்
சேயாம்    நமக்குள்  சேர்ந்திடுவான்
நோயாம்  பிணிகளைப் போக்கிடுவான்
அழகிய சிங்கர் அருள் மலர்ந்தான்

அன்னையர் தினத்தில் அன்னைக்கு கவிதை

அம்மா!அம்மம்மா !
அன்பின் சின்னமா!!
ஆசைத்தீர ஆசிச் சொல்லும் என்னம்மா!!!
பூவாய்ச் சிந்தம்மா
புன்னகைத்தால் தேனம்மா
பாக்கியத்தில் நானும் உந்தன் சேயம்மா
என்னை ஈன்று எடுத்தாய்
இன்பப் பேரில் அழைத்தாய்
தமிழ்ச் சொல்லிக் கொடுத்தாய்
தரும் பாட்டை ரசித்தாய் ()
தத்தித் தத்தி வருகையில் தாவி எடுத்தாய்
தள்ளாடி நடக்கையில் தாங்கிப் பிடித்தாய்
பசியென அழுகையில் பாலும் கொடுத்தாய்
பள்ளிகூடம் செல்லுமெனைப் பார்த்து ரசித்தாய்
உன்னைப்போல் தெய்வதான் உண்டோசொல்
உன்மடியின் மகிமைக்கு உண்டோ சொல் ()

வேலைக்கெனச் செல்லுகையில் ஆசி அளித்தாய்
வெற்றிகளைக் கண்டவுடன் துள்ளிகுதித்தாய்
ஊரார்முன் எம்பெருமைப் பேசிகளித்தாய்
ஊட்டிவிட்டு மிச்சம்தனை நீயும் கொரித்தாய்
அன்னையுன் பணியினைப் பாராட்டுவேன்
என்னையுன் பணியாளாய்ச்  சீராட்டுவேன் ()
இதற்கான மெல்லிசை ராகத்தோடு தாளத்தோடு  கேட்க விரும்பின் youtube சொடுக்கவும் (அ) email sathiyamani@yahoo.com உங்கள் விருப்பத்தை அனுப்பவும் – நன்றி

வேண்டச்செய்வதும் தமிழன்றோ!!

பார்க்க பார்க்க பரவசமாய்
படிக்க  படிக்க  நவரச‌மாய்
ருசிக்க  ருசிக்க   மதுரசமாய்
ரசிக்க    ரசிக்க     தமிழ்வசமாய் ()

நினைக்க நினைக்க கருத்தூறும்
சலிக்க     சலிக்க  சொல்சேரும்
பழிக்க  பழிக்க    படைப்பாகும்
களிக்க களிக்க    பிறப்பாகும் ()

குதிக்க குதிக்க ஆடற்கலை
பதிக்க  பதிக்க  காதற்கலை
உதிர்க்க உதிர்க்க மழலைகளாய்
இனிக்கச் சேரும் செவியலையாய்

வலிக்க வலிக்க விரல்யாழில்
இழைக்க இழைக்க இசையாகும்
கொதிக்க கொதிக்க அனல்மீதில்
குழம்பும் ரசமும் மணமேற்கும்

பறக்க  பறக்க  பறவைகள்போல்
கறக்க கறக்க  பசுபால்போல்
சிறக்க  சிறக்க  இவைச்செல்லும்
சிரிக்க சிரிக்க   கதைசொல்லும்

படைப்பவன்  என்பவன் தாயானான்
படிப்பவன்      தன‌க்கோ  தருவானான்
கவியாய் இசையாய் உண்டானான்
கவியால் தமிழுடன்  ஒன்றானான்

புகழ்தனை வாங்கா தமிழுண்டோ!
போற்றியும் சேர்க்கா தமிழுண்டோ!
வேண்டாதவரையும் முத்த‌மிட்டு
வேண்டச்செய்வதும் தமிழன்றோ!!

அன்பைத் தந்து இறையாகு

கொதித்து நீயும் முகிலாகு
குளிர்ந்து  நீயும் மழையாகு
விதையில் இருந்து மரமாகு
கனிகள் உதிர்ந்து விதையாகு

கருவம்    ஒழித்து மொட்டாகு
உருவம்    உரித்து மலராகு
இரவல்    கேட்டு இலையாகு
இருக்கும் வரையில்  விருந்தாகு

குழப்பம்  விலக்கும் குணமாகு
கலக்கம்  கழிக்கும்   கணையாகு
விளக்கம் வழங்கும் அறிவாகு
இலக்கம்  இல்லா    சுழியாகு

புரியும் வரையில் புதிராகு
புரியா   தவர்க்கும் புலனாகு
தெரியும் வரையில் தெளிவாகு
தெரியா   தவர்க்கும் ஒளியாகு

அடக்கம் என்னும் அழகாகு
அசத்தும் விந்தை  கவியாகு
அட்சயம் பகிர்ந்து அன்பாகு
அன்பைத் தந்து இறையாகு

இமயம் – ஓர்துயரம்

முகில் குளிர்ந்தால் வரும் மழை யின்பம்
முக்கி வெடித்தால் அது பெருந்துன்பம்
இமயம் நிமிர்ந்த கம்பீரம்
இன்று அதற்கும் ஓர்துயரம்
சுற்றுலா சென்ற சிலக்கூட்டம்
சுழற்றி போட்டது காட்டாறு
பக்தியில் சென்ற சிலக்கூட்டம்
பாதியிழந்தது கூட்டாறு
கேதாரம் தான் ஆதாரம்

வெள்ளத்தால் பெரும் சேதாரம்
பொங்கி பெருகிடும் கங்கையிலே
புண்ணியம் சேர்ப்பதும் இப்படியா
தங்கி தரிசனம் தரும் எழிலில்
பயங்கரம் தெரிவதும் ஒருமுறையா
மலைநாட்டவரின் மந்தாகினி
கொலையாட்டமும் கண்டதனால்
பயமும் வெறுமையும் உடன்தாக்க‌

பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டாய்
ஆறுதல் தந்தவர் வாழ்வினுக்கு
வல்லமையாளர்கள் வலுவமைப்போம்
அள்ளி தருபவர் வள்ளல்யென்போம்
உள்ளம்தந்திடின் வாழ்த்திடுவோம்

மறதி!

கண்ணாடி தன்னைத் தேடி கடைசியில்
தலையில் கண்டது கண்கள்
வெட்டி பேச்சில் பாதைமறந்து
வெளுத்துப் போனது கால்கள்
ஆத்திரம் வந்து அடுக்களை தன்னில்
பொங்கி வழிந்தது பாலாறு
சூத்திரம் கற்றும் மனம் தள்ளாடி
தூங்குகின்றது…கோளாறு
தானாய்ப்பேசி பைத்தியமென்றனை
ஆக்கவிட்டது கைபேசி
கற்சிலையாக ஓரிடச்சிறையாய்
கட்டிப் போட்டது கணினி
தடவித் தடவி கடவுச் சொல்லை
தேடிஅயர்ந்தது  *வங்கியியங்கி
குருவி போல கொத்திப்போட்டும்
கிடைக்கவில்லை புத்தாடை
ஆங்கிலக் கெட்ட வார்த்தையில் வாயும்
ஐயோ   என்றது தமிழில்
தங்கைப் பெயரில் தவறாய் அழைக்க‌
தடியடி யானது வீட்டில்
மாத்திரை என்று உறையுடனிட்டு
மாட்டி கொண்டது  வாயிலே
பயணச்சீட்டைக் கேட்டதும் தெரிந்தது
அதுவும் வீட்டு பையிலே
தாமதமாக வாழ்த்துகள் சொல்வது
தரணியில் இன்று நிகழ்வது
ஓட்டை போட்டப்  பின்னால் வந்து
ஊழல்  அரசை இகழ்வது
விமானம் கிளம்பிய வேகத்திலே
வந்தது வீட்டைப்பூட்ட மறந்தது
தன்மானம் தான்விட்டுவிடாது
மறதியில் மட்டும் வளர்ந்தது
எங்கே வைத்தோம் என்றே நினைத்து
திகிலடைந்த சிலநேரம்
எங்கோ வைத்தோம் என்றே மறந்து
வாழ்க்கை சென்றது வெகுதூரம்

*வங்கியியங்கி==ATM

வாலி – வாழி


கவிதை வரிகளில் கலந்து வாழி
தமிழின் அழகினில் நிறைந்து வாழி
அரங்கனோடு  நீ உரங்கப்பா -உன்
அடிகள் சேருமென் இரங்கற்பா  (வாலி)

அமுத வரிகளில்     இசையக்   கல‌ந்தாய்
அரியக்கருத்துகள்   இழையச்  சுரந்தாய்
இருந்த போதினில் பாதி உணர்ந்தேன்
இழந்தப் போதினில் யாவும் இழந்தேன்
வாலி பெயரதின் மகிமையோ இது   (வாலி)

செவிலித்தாயெனச் சேய்க்கு கிடைத்தாய்
செவியில் ஓய்வினில் தமிழைக் கொடுத்தாய்
தூங்கச் செல்லுமுன் துயரம் அழித்தாய்
இன்று தூங்கியேன் துக்கம் அளித்தாய்
வாலி பெயரதின் அருமையோ இது (வாலி)

நதியின் புதரினில் தாடிக் காண்பேன்
கதிரைப் பொட்டுடை நெற்றி காண்பேன்
விதியின் வெகுண்டெழும் கோபம் காண்பேன்
மதியில்  குளிர்ந்திடும் சிரிப்பும் காண்பேன்
வாலி பெயரனில் உரிமையோ இது (வாலி)