கவியரங்கம்
(கவி சத்தியமணி)
தலைப்பு ; தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
நாள் : 30-09-2018 காலை 9-12 மணி வரை
இடம் : இரமணக் கேந்திரம் , இலோடி சாலை, புதுதில்லி
காலஅளவு நெருக்கடி காரணமாக மேடையில் விடுபட்ட பகுதி
இரு முறை
******
தமிழ்த் தாய் வணக்கம் (வெண்கலிப்பா)
கற்கண்டு சர்க்கரைக் கனிரசம் பாயசம்
வற்றாது மார்போடு மதுசுரந்து அமுதூட்டி
பெற்றாயே கோகிலமே பேணாயே முத்தமிழே
நற்றாயே நீயென்றன் உயிர்
உயிரென்று நீயானாய் உள்வெளியில் மூச்சாகி
வயிரென்று நீயானாய் எழுசுரமென் இசையாகி
பயிரென்று நீயானாய் பருவத்தால் கவியாகி
பெயரென்று நீயானாய் அன்பே
சபை வணக்கம் ( கலி
விருத்தம் )
அன்பிலே சுகவாசி அருளிலே வனவாசி
அறிவிலே புவிவாசி
ஆளுமைத் தில்லிவாசி
அரங்கிலே கவிவாசி அழைத்தா யெனை [தமிழே] ஆசி
முழங்கிடு கரங்கள்
வாசி !! வாசி
!! ஆசி
வழங்கிடு கரங்கள்
வாசி !! வாசி
!!
நன்றி நவிலல் (தரவு கொச்சகக் கலிப்பா)
முத்தரங்கம் காணடியோ முத்தழகே தமிழணங்கே
இத்தரங்கம் யேறடியோ விந்தையுமே காணடியோ
கவிபாடல் களிப்புறவே கவியரங் குரமணமாய்
கருத்தோடல் குளித்திடவே கருத்தரங்கு சமணமாய்
புவிபாடும் பாராட்டரங்கு பெற்றிடுவோர்ப்புறமாய்
புலமையுறு இலக்கியப் பணிவழங்க இருவடிவாய்
திகஇபேவும் தகஇமையம் ஒருங்கிணைந்து மனங்கூடி
(தில்லி கலை இலக்கியப் பேரவை) (தமிழர்க் கலை இலக்கிய மையம்)
தந்திந்த வாய்ப்புக்கு நன்றிகள் பலகோடி!!
அவை வணக்கம்
வாழும்பா ரதியாம் சுகுமாரன் தலைவருக்கும்
தாழம்பூத் தமிழ்ச்சங்க இரமா மணீயாருக்கும்
கவித்துவ மினிக்கத்தந்த கவிதாயி னிகட்கும்
கவிச்சுடராய் பெரும்புயலாம் கவிஞர்க் குழாமிற்கும்
செவியினிலே கேட்டபடி சிந்தையிலே ரசித்தபடி
செல்லுடனே சொல்லாடும் உங்களுக்கும் வணக்கங்கள் !
வஞ்சி விருத்தம்
வாசிக்கும் உலகுக்குக் குழலையாய்
நேசிக்கும் உலகுக்கு மழலையாய்
பூசிக்கும் உலகுக்குக் விமலையாய்
ஆசிக்கும் உலகுக்குக் கமலையாய்
இருக்கும்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் அதை
அமரனாய் ஆக்கிடும் தமிழ் சங்கத்தேர்
உயிருக்கு சீர் தரும் விசுவாசி அதை
உணர்த்தவே வந்தேன் இக்கவிவாசி
வானதில் தாரகைகள் இருப்பத்தேழும் வாசிக்க
யாமதில் ஈற்றாய் வந்துனையும் யாசிக்க
வந்தேன் ! வசித்தேன் !! வாசிக்கிறேன் !!
தமிழ் அற்புதமான
தாய்மொழி!
இயல்பே இயல்
! இதமே இசை!
நடையே நாடகம்
புன்-நகையே
நாட்டியம்!!
பணிந்தால் பாடவைப்பாள் அணிந்தால் ஆளவைப்பாள்
தணிந்தால் வாழவைப்பாள்
திணித்தால் தாழவைப்பாள்
தமிழ் நம்
உயிரெனில் உயிரோட்டம்
உச்சரிப்பில் தேரோட்டம்
பயிரோடு வேரோட்டம் குரலோடு குறளோட்டம்.
சித்திரமும் கைப்பழக்கம்,செந்தமிழும் நாப்பழக்கம்
பத்திரப்படுத்தி வந்தால்
பாரெங்கும் நம்முழக்கம்
மூச்சிருந்தால் பேச்சிருக்கும் பேச்சிறந்தால் வாழ்விறக்கும்
நீச்சிறந்தால் ! முத்தமிழா! வீழ்ந்திடுமோ
இத்தமிழும் ?
லளழ என்ற வீச்சினிலே சுவாசமுண்டு
ரற என்ற வீச்சினிலே சிலேடைஉண்டு
ணனந என்ற வீச்சினிலே நாடிஉண்டு
நலுங்காமல் குலுங்கையிலே நாதமுண்டு.
ஒலியினிலே ஒளிந்து கொண்டு பொருள் மாறுவாள் - தமிழ்
நடையினிலே அளவு கொண்டு நிறம் மாறுவாள் - தமிழ்
உபசரிப்பில் விருந்து ண்டு உயிரானவள் - தமிழ்
உச்சரிப்பில் இருந்து கொண்டு உயிர் வாங்குவாள் !!
திமு.....திபி… திருமணத்திற்கு முன் ..திருமணத்திற்கு பின் பெண்போல்
எப்படி ? இப்படி !!....
***** லளழ மூச்சு
ழகரம் அவளுக்கு அழகு ழகரம் அவளுக்குச் சிறகு
ழகரம் அவளுக்குச் சிறப்பு ழகரம் அவளுக்குச் சிரிப்பு.
ழகரம் அவளது மகிமை ழகரம் அவளது இளமை
ழகரம் அவளது புதுமை ழகரம் அவளது பெருமை
மழையை மலையென்றால்
மண்ணுக்கு நீருமுண்டோ
இழையை இலையென்றால்
பெண்ணுக்கு ஆடையுண்டோ
(நூலிழை ; அணிகலன்)
கழையை (வேய்ங்குழல்)
கலையென்றால் இசைக்கும்
என ஏற்றால்
பழிக்கு பலியென்றால்
பரிகாசம் ஆகாதோ ?
வாழையை வாலையென்பின்
கன்றுகள் வந்திடுமோ
?
(பூப்படையாத பெண்)
தாழையைத் தாளையென்பின்
தேங்காய் தந்திடுமோ
?
(தென்னைமரம்) (கால்)
கழகத்தைக் கலகமென்றால்
காப்பாற்ற யார்வருவார்
பழக்கத்தை மாற்றிடுவீர்
தமிழன்னை வருந்திடுவாள்
பழக்கத்தை மாற்றிடுவீர் தமிழன்னை
உயிர்த் தருவாள்.
கழியைக் (ஊர்)
கலியாக்கி (கலிகாலம்)
கண்டதெலாம் போதும்
விழியைப் பெரிதாக்கி
ஆக்க வழியைக்
காண்போமா ?
கலையைக் காணாமல் ஆடைக்களைகின்றார்
வலையை விரிக்கப் போய் வளையில் விழுகின்றார்
(உயிர்களை அகப்படுத்துதற்குரிய கருவி ; சூழ்ச்சி )(கைவளை ; சக்கரப்படை)
விலையைப் பார்த்தவர் அதன் விளைவைப் பார்க்கவில்லை
மூலையைப் பார்த்தவர் மூளையைக் கேட்கவில்லை
(கோணம் ; வீடு)
விளிக்கின்ற வகையறியாது விழித்தது போதும் ! - பிறமொழியைப்
பழிப்பதை மாற்றி நமைச் சீராக்கி வாழும் !!
பள்ளியறை யென்பது இனி பல்லியறை இல்லை
சுவற்றில் இனி இச்சுமிட எச்சலிட?
***** ரற மூச்சு
மரக்கறி விடுதியில் மரக்கரி போட்டால் மறுபடி செல்வோமா ?
உரித்துவா யென்பதை உறித்து (தூக்கு) வாயென்றால் உயிர்பெறுவோமா ?
இரவில் இரவுதனைக் (இரக்கம் ) காட்டுவது இறவாகி (முடிவு )போகில் பலனுறுமா?
உரவில் (மனவலிமை) வளமாகி போகினால் உறவுக்குப் (சுற்றம் ; நட்பு ) பிரிவுவருமா?
*****ண ன ந
மூச்சு
ஆன் எனும் பெண் எருமை ஆண் (வீரியம் ; தலைமை) ஆகும் போது எத்தனை அனுதாபம் ?
என் எனும் அகம்பாவம் எண்ணாகும் (மனம் ; கவலை ) போது எத்தனை பரிதாபம்
கான் எனும் புகழ் காண்ணாகும் பொழுது (காட்சி ; அழகு ) சிறப்பு
மான் யெனும் மகத்துவம் மாண்ணாகும் பொழுது (மாட்சிமை ; மடங்கு) சிரிப்பு
pr
சொல் விளையாட்டு
துண்டு தாவெனத்
துணிகடையில் கேட்டால் கிடைப்பதென்ன?
புலால் கடையில் கேட்டால் கிடைப்பதென்ன?
அறை தாவென
விடுதியில் கேட்டால் கிடைப்பதென்ன?
வீதியில் கேட்டால் கிடைப்பதென்ன?
கொண்டுதாவென்பதைக் கொன்றுதாயென்றால் ?
வெற்றிதாயென்பதை வெட்டிதாயென்றால் ?
அறிந்தது சிலப்பதிகாரம் அதுவே தமிழ் அதிகாரம் !!
நற்சேலைப் பெற்று (ஆற்று மீன் )உணவிடுவாய் என்றான் - மனையோ
நற்சேலை வாங்கி உடுத்தி வந்தனளே !!
ஆகத் இத்தகு குறும்புகாரி திமிறுகாரி வம்புக்காரி கண்சிமிட்டுகாரி
தமிழ் எங்கள் நாவுக்குத் தேன்
தவறாய் உரைப்போர்க்கு கொட்டிடும் தேள்
தமிழ் எங்கள் நாவுக்கு ஏல் (உணர்ச்சி)
தவறாய் தடைப்போட்டால் துளைத்திடும் வேல்
தமிழ் எங்கள் புகழுக்கு வாகம் (வாகனம்)
தவறாய் இகழ்ந்திடின் நஞ்சிடும் நாகம்
தமிழ் எங்கள் பருவத்தின் தாய்மை
தவறாய்ப் பார்ப்போர்க்கு கொன்றிடும் கூர்மை
தமிழ் எங்கள் பாசத்தின் கன்னி
தவறாகத் தீண்டிடின் வெடிக்கின்ற கண்ணி
தமிழ் எங்கள் உலகுக்கு நீர் அதை
தடைப்போடும் அரசுக்கோர் பயம்செயும் போர்
பொறுத்து பார்க்கின் தெரியும் பொருத்தம் ?
உறுக்கி பார்க்கின் தெரியும் உருக்கம் ?
அக்கறை காட்டுங்கால் அக்கரைச் சேர்ப்பிக்கும்
சிக்கலைச் செய்தாலோ சீக்கிரம் சிறைவைக்கும்
ஆகவே
இக்கவியரங்கே! இனிதான தமிழ்குலமே!
துதிப்புரை (தரவு கொச்சகக் கலிப்பா)
“கிளையாடும் கிளி கொடியாடும் கனி
வளையாடும் கரம் சிலையாடும் கலை
அலையாடும் கடல் கலந்தாடும் நுரை
விளையாடும் குரு மயிலோடு மிக
கயலாடும் நதி மதுரையம்பத் திலே
தினந்தோறும் உனைத் துதிபாடும் எனை
உயிர்தானென் உளம் உருவானட் செவி
இசையாயின் பதம் எனக்கருள் வாய்”
என அவள் தாள் வணங்கி
பயனுரை (தரவு கொச்சகக் கலிப்பா
உயிரான தமிழுக்கு ஒன்றாகி பணிசெய்வோம்
உயிரான தமிழுக்கு ஒன்றாகி துணைசெய்வோம்
உயிரான தமிழுக்கு ஒன்றாகி கவிசெய்வோம்
உயிரான தமிழுக்கு ஒன்றாகி புகழ்செய்வோம்
நேர் செய்வோம் நிறைசெய்வோம் சீர் செய்வோம் அணிசெய்வோம்
இந்தத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் உங்கள் உயிருக்கும் நேர் இந்தத்
தமிழ் நமது உயிருக்கும் மேல்
என்று கூறி விடை பெறுகிறேன்
நன்றி ! வணக்கம் ! வாழியச் செந்தமிழ் ! வளர்க பல்லாண்டு !
