Monday, 21 October 2013

வாழ்க்கைக்கு அர்த்தங்காண்

நாத்திகரை ஆத்திகராக மாற்றும் மதபோதகர் இல்லை யாம்
பணமாற்றத்திற்காக மதம்மாற்றும் சுகமாந்தர் இல்லை யாம்
பிறர்சொல்வதைக் கேட்டு தலையாட்டும் சிறுத்தறிவும் இல்லை

பகுத்தறிவு என்றுசொல்லி பண்படாத‌ பருத்தறிவும் இல்லை


தெரியும் வரையில் கீழே வெறும் மண்,கல்
தெரிந்தபின் ஆன்றோரின் சிதைந்தத்தோல்
வீசும் வரை மண்டலத்தின் வெறுங்காற்று
பேசும்போது கைபேசியின் மின்னொலிஅலை


அசுரத்தனமாய் பேசவைக்கும் இளமைக் களி
அலட்சியமாய் சீண்டியக் கொசுவின் டெங்கில்பலி


அடிமைகளால் கட்டிய தில்லி கோட்டைகள்
அரசர்கள் எங்கே ? அந்தப் புரங்கள் எங்கே? 
எரிந்தது சிலரோடு எலும்பினில் சிலர்வீடு
தெரிந்ததா இதற்கு வயதில்லை!வரம்பில்லை!


வறுமையில் ஒருபக்கம் பட்டினிபிணி - விதியென்றார்
வாய்ப்பினில் ஒருபக்கம் கறுப்புபணம் - மதியென்றார்
வரலாற்றில் விழுந்தால் நிகழ்காலம் வீணாகும்
வாலிபத்தில் விழுந்தாலோ வருங்காலம் பாழாகும்


எதிர்காலம் வளமாக்க ஏழ்மைகளின் இல்ல‌ங்காண்
முதிர்ச்சிக்கு முன்னாலே வாழ்க்கைக்கு அர்த்தங்காண்

Monday, 7 October 2013

கொலுவிருக்க வந்தனளே

சக்தி ரதத்தில் தேவியர்களுக்காக‌ என்னுடைய எளியத்  தமிழ் தோரணங்கள் !  

கொலுவிருக்க வந்தனளே புவனேஸ்வரி - ராஜ‌
கொலுவீற்று  அரியணையில் ராஜேஸ்வரி
தொழுமடியார்  அன்பில் சக்திரதமேறி - தினம்
பொழிந்தனளே தமிழ்சிந்தும் ஞானேஸ்வரி ()

படியென்று பலகலைகள் பயில வைத்தாய்
படிபடியாய் படியேற்றி உயர‌ வைத்தாய்
அடியெடுத்து உள்நுழைந்து அலங்கரித்தாய் - சக்தி
வடிவெடுத்து அடியார்க்கு  நலம‌ளித்தாய் ( )

மலைமகளாய் வீரத்தை எமக்களித்தாய்
அலைமகளாய் அருட்செல்வப் பெருக்களித்தாய்
கலைமகளாய் இசைக்கவிதைச் செவிக்களித்தாய்
நிலைமகளாய் கீர்த்திபுகழ் சிசுக்களித்தாய் ( )

நவராத்ரி நோன்பிருக்க மனமளித்தாய்
நவமணியாய் சுண்டலெனச் சுவையளித்தாய்
தவமியற்ற தெரியாது! துதியளித்தாய் - அதைத்
தவமென்று நிறைவேற்றி  அருளளித்தாய்()